2022-23 ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சுமார் 7,200 இடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த இடங்களில் சேரும் மாணவர்களில் பெரும்பான்மையினர் வெளி மாநில மருத்துவக் கல்லூரிகளில் தான் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கும். அவர்கள் சேரும் மாநிலங்களில், அம்மாநில மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப் படும் என்பதால், அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்காகத் தான் கூடுதலாக ஆங்கிலத்திலும் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகிறது என்று அரசு தரப்பில் வாதிடப்படலாம். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் நோயாளிகளுக்கு புரியும் மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம் என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநில மொழியில் அம்மாநில மாணவர்களுக்கு மட்டும் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுவது தான் சரியானதாக இருக்கும்.