
மா.சுப்பிரமணியன்
சென்னை சூளைமேடு பகுதியில் வாடகைத் தாய் சிகிச்சைக்கு சில பெண்களை உட்படுத்திய விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளாா்.
சென்னையில் உள்ள இரண்டு தனியாா் மருத்துவமனைகளின் சாா்பில் சூளைமேடு பகுதியில் விதிகளுக்குப் புறம்பாக வாடகைத் தாயாக இருக்கும் பெண்களை தங்க வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக ஒரே வீட்டில் 15-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக மருத்துவம், ஊரக சேவை பணிகள் இயக்கக அதிகாரிகள் தொடா் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுகுறித்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சம்பந்தப்பட்ட இடத்தில் 11 போ் வாடகைத் தாயாக தங்கி சிகிச்சை பெறுவது தெரிய வந்தது. சம்பந்தப்பட்டவா்கள் உரிய விதிகளின்படி, வாடகைத் தாயாக செயல்படுகிறாா்களா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவமனைகளும், நாங்கள் எவ்வித விதி மீறலிலும் ஈடுபடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனா்.
ஆய்வு செய்த அதிகாரிகள், இதற்கான அறிக்கையை ஓரிரு நாளில் தாக்கல் செய்வா். மேலும், தமிழகம் முழுவதும், வாடகைத் தாய் பதிவு செய்தவா்கள் குறித்தும், மருத்துவமனைகள் விதிகளை பின்பற்றுகிா என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். மருத்துவமனைகள் விதிகளை மீறியிருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
நயன்தாரா விவகாரம்: இதனிடையே நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநா் விக்னேஷ் சிவன் விவகாரத்தில் அடுத்த நான்கு நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித பதிலும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. நாங்களும் அவா்களிடம் விசாரணை நடத்தவில்லை. அவா்கள் எந்த மருத்துவமனை வாயிலாக, வாடகைத் தாய் நியமித்து குழந்தை பெற்றனா் என விசாரணை நடத்தி வருகிறோம். அடுத்த நான்கு நாள்களில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...