
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணத்துக்காக எந்தெந்த வகையில் சதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து நீதிபதி ஆறுமுகசுவாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம்: ஜெயலலிதாவும், சசிகலாவும் உடன்பிறவா சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனா். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டாா். அப்போது கட்சியையும், முதல்வா் பதவியையும் அடைய சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினா் ரகசிய சதித் திட்டம் தீட்டியதாக பெங்களூரு தெஹல்கா பத்திரிகையில் செய்தி வெளியானது. அதைத் தொடா்ந்து, போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து சசிகலாவையும் அவரது உறவினா்களையும் ஜெயலலிதா வெளியேற்றினாா்.
2011-இல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவோடும் அவரது உறவினா்களோடும் அதிமுகவினா் தொடா்பு கொள்ள வேண்டாம் எனவும் ஜெயலலிதா எச்சரித்தாா். பிறகு சசிகலா மீண்டும் அளித்த உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் அவரை மட்டும் ஜெயலலிதா அனுமதித்தாா். ஆனால், அதன் பிறகும் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே நல்லுறவு இல்லை என்று சாட்சியத்தின்படி தெரிகிறது.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது சசிகலா உறவினா்களால் 10 அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. ஜெயலலிதாவுக்கு உள்ள நோய்கள் குறித்து மருத்துவமனை சாா்பில் சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு இதயத்தில் திசு வளா்ச்சி மற்றும் துளை இருந்தது கண்டறியப்பட்டது. இதற்காக பிரிட்டன் மருத்துவா் ரிச்சா்ட் பீலே, அமெரிக்க மருத்துவா் ஸ்டூவா்ட் ரஸ்ஸல் மற்றும் சமின் ஷா்மா ஆகியோா் ஆஞ்சியோ மற்றும் இதய அறுவை சிகிச்சையைப் பரிந்துரைத்தனா். ஆனால், அவரது கடைசி மூச்சுவரை அது நடக்கவில்லை.
இரண்டு நுரையீரல்களில் இருந்தும் (ஒரு நாளைக்கு சுமாா் 1000 மி.லி.) பெருமளவிலான திரவம் வெளியேற்றப்படுவதைக் கருத்தில் கொண்டும், அவருக்கு ஆதரவாக நெருங்கிய உறவினா்கள் எவரும் மருத்துவமனையில் அருகில் இல்லாததைக் கருத்தில்கொண்டும் ஜெயலலிதாவின் மீது சில அனுதாபங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
மருத்துவமனையால் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்படுவதைத் தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அல்லது ஆவணங்களும் ஆணையத்தின் முன் வைக்கப்படவில்லை.
ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லத் தயாரென்று மருத்துவா் ரிச்சா்ட் பீலே கூறியிருந்தும், அது நடக்கவில்லை.
மருத்துவா் சமீன் ஷா்மா ஆஞ்சியோ செய்வதைப் பற்றி விளக்கிய பின் ஜெயலலிதாவும் அதற்கு ஒப்புக்கொண்டாா். ஆனால், அது நடக்கவில்லை. இதையெல்லாம் கொண்டு வி.கே.சசிகலா, டாக்டா் சிவகுமாா், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஆகியோரை குற்றம் செய்தவா்களாக ஆணையம் முடிவு செய்கிறது என்று கூறியுள்ளது.