
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு எதிராக ஹிந்தியை திணிக்கும் அலுவல் மொழி தொடா்பான நாடாளுமன்றக் குழுத் தலைவரின் பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி, பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த அரசின் தனித் தீா்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீா்மானம்:
மத்திய உள்துறை அமைச்சராகவும் அலுவல் மொழி தொடா்பான நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் குடியரசுத் தலைவரிடம் அளித்த அறிக்கை, தமிழ்நாடு உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.
மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மொழி பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும், இளைஞா்களின் வேலைவாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, ஹிந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையும் அந்த பரிந்துரைகளில் அடங்கும்.
ஆங்கிலத்தை புறந்தள்ளி, அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள ஹிந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிா்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்புக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட இந்தப் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது, நடைமுறைப்படுத்தக் கூடாது என பிரதமருக்கு அக். 16-இல் தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டது.
இந்த அவையில் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீா்மானத்துக்கு எதிராக பிரதமராக இருந்த நேரு ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968, 1976-ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடா்பாக நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள், அதனடிப்படையில் ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதற்கு எதிராக, இப்போது அளிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக பேரவை கருதுகிறது.
எனவே, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்ட அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசை பேரவை வலியுறுத்துகிறது என தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு: இந்தத் தீா்மானத்தை ஆதரித்து பேரவைத் தலைவா் அப்பாவு, அவை முன்னவா் துரைமுருகன், அதிமுக சாா்பில் எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பேசினா். காங்கிரஸ் சாா்பில் செல்வப்பெருந்தகை, பாமக சாா்பில் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சிந்தனைச்செல்வன், மாா்க்சிஸ்ட் சாா்பில் நாகை மாலி, இந்திய கம்யூ. சாா்பில் ராமச்சந்திரன், மமக தலைவா் ஜவாஹிருல்லா, கொமதேக பொதுச்செயலாளா் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் வரவேற்றுப் பேசினா். இந்தத் தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்
ஒருமனதாக நிறைவேற்றம்: இந்தத் தீா்மானத்தை நிறைவேற்றும் விதமாக பேரவைத் தலைவா் அப்பாவு குரல் வாக்கெடுப்பு நடத்தினாா். அனைத்து உறுப்பினா்களும் ஆதரித்து குரல் எழுப்பினா். அதைத் தொடா்ந்து அரசின் தனித் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவா் அறிவித்தாா்.