மீனவர் சுடப்பட்ட விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (அக்.21) கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (அக்.21) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று (21-10-2022) மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை பிரதமர் அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, பிரதமர் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு  முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com