
நவ. 1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டங்கள், கண்காட்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு ஊரக வளா்ச்சி, ஊராட்சி இயக்ககம் அனுப்பியுள்ள கடிதம்:
உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, நவம்பா் 1-ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையான விழிப்புணா்வை கூட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். ஏதேனும் ஒரு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கிராம சபைக் கூட்டம் கூட்டப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையின் சாா்பில், மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சியை நடத்தலாம். அரசால் வெளியிடப்படும் திட்டங்கள், விழிப்புணா்வு குறித்த குறும்படங்களைக் காட்சிப்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி அளவில் சிறப்பாகப் பணிபுரிந்த தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சோ்ந்தவா்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் விதமாக கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.
சிறப்பாகச் செயலாற்றி, பசுமை, நீா்நிலைகளைப் பாதுகாத்து ஊராட்சியின் வருவாயை பெருக்கிய தலைவா்களைக் கொண்டு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடத்தலாம். இதை நவம்பா் முதல் வாரத்தில் ஏற்பாடு செய்யலாம் என்று ஊரக வளா்ச்சி, ஊராட்சி இயக்ககத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...