மதுரை எய்ம்ஸ் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம்!


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. 

அடிக்கல் நாட்டப்பட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 2021 மார்ச்சில் ஜப்பான் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி, தற்போது ஆட்சியில் உள்ள திமுக ஆட்சியிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், மதுவரை எய்மஸ் மருத்தவக் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று, அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன்

இதனிடையே, ஜைக்கா நிறுவனம் சார்பில் மருத்துவமனை  வரைபடம் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. மொத்த திட்ட மதிப்பான ரூ.1,977 கோடியில் தற்போது ரூ. 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மீதமுள்ள நிதியை அக்டோபர் 26 க்குள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டறிக்கை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், 2023ஆம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்திற்கான வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் ஆணைய அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2026 ஆம் ஆண்டு வரை கட்டட பணிகள் நடைபெறும் எனவும் 2028 ஆம் ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட பல எய்ம்ஸ் மருத்துவமனைகள் பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கடந்த மாதம் மதுரை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை மாவட்டத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாவும், இதற்கான  பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், கூடுதலாக, தொற்று நோய் பிரிவுக்கு ரூ.164 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடன், 250 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளுடன் அமையவிருக்கிறது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அதிர்ச்சியடைந்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக கூறப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள், 95 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? என கேள்வி எழுப்பியவர்கள், இதன் மூலம் மத்திய அரசு தமிழகத்ததை ஏமாற்றுகிறது, வஞ்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றவர்கள், இதே நிலைதான் மதுரை விமான நிலையத்திற்கும் ஒரு பைசா கூட ஒதுக்காமல், ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். 

இந்நிலையில், சமீபத்தில் தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சா் பாரதி பிரவீண் பவாா்,  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் கரோனா தொற்று பரவல் காரணமாக தடைபட்டன. மத்திய அமைச்சரவை இதற்காக நிதியை ஒதுக்கியது. இப்போது மறு மதிப்பீடு செய்யப்பட்டு, தற்போது ரூ.1977 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்காலிகமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று, வகுப்புகள்நடைபெற்று வருகின்றன. வருகிற 2026 ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது தொடங்கும் என கேட்கப்பட்டதற்கு சுகாதாரத் துறை அமைச்சகம் எப்போது தொடங்கும் என்ற தகவல் இல்லை எனவும், கட்டுமான பணிகள் 2026 இல் முடிவடையும் என்று பதிலளித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கட்டுமானப் பணிகளே தொடங்கப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டாக்டர் நாகராஜன் வெங்கட்ரான் தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழு தலைவராக உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com