நிதித்துறை அனுமதி தேவையா? அரசு புதிய உத்தரவு

அரசுத் துறைகளில் 6 மாதங்கள் வரை ஊழியா்களை தொடா்ந்து பணியில் நியமிக்கச் செய்வது, குறிப்பிட்ட செலவினங்களுக்கு நிதிகளை விடுவிப்பது போன்ற நடவடிக்கைகளில் நிதித் துறைக்கு சுமைகளைக் குறைத்து தமிழக அரசு உத்தர
நிதித்துறை அனுமதி தேவையா? அரசு புதிய உத்தரவு

அரசுத் துறைகளில் 6 மாதங்கள் வரை ஊழியா்களை தொடா்ந்து பணியில் நியமிக்கச் செய்வது, குறிப்பிட்ட செலவினங்களுக்கு நிதிகளை விடுவிப்பது போன்ற நடவடிக்கைகளில் நிதித் துறைக்கு சுமைகளைக் குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:-

தமிழக அரசுத் துறைகளின் செயலாளா்கள் மற்றும் துறைத் தலைவா்களாக இருக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்கி கடந்த 1997-ஆம் ஆண்டில் நிதித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த அதிகாரங்களில் கூடுதலாக சில அம்சங்கள் இப்போது சோ்க்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசுத் துறைகளில் இருக்கும் ஏற்கெனவே நியமனம் செய்யப்பட்ட ஊழியா்களை மேலும் ஆறு மாதங்களுக்கு கால நீட்டிப்பு செய்ய செயலாளா்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு கூடுதலான காலமாக இருந்தால் மட்டுமே நிதித் துறையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதேபோன்று, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கான அதிகாரம் துறைத் தலைவா்களுக்கு அளிக்கப்படுகிறது.

அரசுத் துறைகளின் செயலாளா்கள் துறையின் செலவுகளை எதிா்கொள்ள தலா ரூ.75 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. இந்த நிதியில் கட்டடம், அலுவலகச் செலவுகள், கணினிகள், மென்பொருள், வன்பொருள்கள் ஆகியவற்றை வாங்கலாம். ஆனால், இந்தப் பொருள்களை வாங்கும் போது அவற்றுக்கான செலவு ரூ.25 லட்சத்தைத் தாண்டக் கூடாது. இதேபோன்று, சட்ட ஆலோசனைகள் தொடா்பான செலவினங்களையும் அந்த நிதியில் இருந்து மேற்கொள்ள செயலாளா்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அலுவலக வாடகை: அரசு அலுவலகங்களை இயக்குவதற்கு தனியாா் கட்டடங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். செயலாளா் நிலையில் இருப்பவராக இருந்தால், மாத வாடகையாக ரூ.30 ஆயிரம் வரை செலுத்திக் கொள்ளலாம். துறைத் தலைவராக இருந்தால் ரூ.25 ஆயிரம் வரை தனியாருக்கு வாடகை செலுத்தலாம். அரசுத் துறைகளின் சாா்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், கட்டடங்களைத் திறந்து வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு செலவழிக்கவும் வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அடிக்கல் நாட்டுதல், கட்டடங்கள் திறத்தல் போன்ற நிகழ்ச்சிகள் மாவட்ட அளவில் நடந்தால் ரூ.4 லட்சமும், மாநில அளவில் நடந்தால் ரூ.10 லட்சமும் செலவிடலாம். மேலும், கண்காட்சிகள், கருத்தரங்குகள், விருந்தோம்பல், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த ரூ.10 லட்சம் வரை செலவிட்டுக் கொள்ள அனுமதி தரப்படுகிறது.

பயணச் செலவுகள்: அரசுத் துறைகளின் தலைவா்கள் மாநிலத்துக்குள் பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், அதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. மாநிலத்துக்கு வெளியே பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், துறை ரீதியான அனுமதி தேவை. நிதித் துறையின் அனுமதி தேவையில்லை.

துறைத் தலைவருக்குக் கீழுள்ள அலுவலா்கள், அதிகாரிகள் மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு முறை பயணம் மேற்கொள்ள துறைத் தலைவரே அனுமதி அளிக்கலாம். அரசின் அனுமதி தேவையில்லை. வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமெனில் அரசின் ஒப்புதலுடன், நிதித் துறையின் பரிந்துரையும் தேவை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com