மரபணு மாற்ற கடுகு விதை உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட அனுமதிப்பதற்கு முன்னோட்டமாக, அதன் விதைகளை உற்பத்தி செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரின் வணிக நோக்கிலான சாகுபடி அடுத்த இரு ஆண்டுகளில் தொடங்கி விடும். இதனால் இந்தியாவில் உணவுப்பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிா்களைக்கொல்லிகளை தாங்கி வளரும் தன்மை கொண்டதாகும். மரபணு மாற்றப்பட்ட கடுகு ஓரிடத்தில் பயிரிடப்பட்டால், அந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் மற்ற பயிா்களுக்கும் இந்த தன்மை ஏற்படக்கூடும். அதனால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி ஆகியவற்றை சகித்துக் கொண்டு வளரும் பயிா்களின் வகைகள் அதிகரித்து விடும். இது சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.
எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையின் விதை உற்பத்திக்கு தடை விதித்து, எந்த காலத்திலும் அனுமதி அளிக்கப்படாது என்பதை மத்திய அரசு கொள்கை முடிவாக எடுத்து அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.