தேவர் ஜெயந்தி: மதுரையில் அரசியல் தலைவர்கள் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள். 
தேவர் ஜெயந்தி: மதுரையில் அரசியல் தலைவர்கள் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, ராமச்சந்திரன், மூர்த்தி, இராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மருதுபாண்டியர்களின் 221-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவர்களது சிலைகளுக்கும் அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

பின்னர், கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில்,  "தமிழகத்தை பிளப்பதற்காக ஒரு கவர்னர் வந்திருக்கிறார். அவர் முத்துராமலிங்க தேவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மீனாட்சி அம்மன் கோவிலில் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்து செல்லும் ஆலய நுழைவு போராட்டம் நடந்த போது ஒத்துழைப்பு அளித்தவர் தேவர். எனவே சாதி, மத வேறுபாடுகளுக்கு தமிழகத்தில் இடமில்லை" என தெரிவித்தார்.

கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் நின்றபடி வந்தார் ஓ.பன்னீர்செல்வம். தமுக்கம் மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அவரை அழைத்து வந்தனர். அவருடன் எம்பி ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர் பேட்டியளித்த அண்ணாமலை, "தமிழகத்தில் ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். தமிழகத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. ஆகவே, மீண்டும் தேவர் பிறந்து வர வேண்டும். தேவரின் சித்தாந்தம், கொள்கையை பாஜக மட்டுமே செயல்படுத்த முடியும்" என கூறினார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரும் தனித்தனியே பிரச்சார வேனில் வந்து சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அதன் மாநில தலைவர் ரவி பச்சமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எம்பி சு.வெங்டேசன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com