பேருந்துகளில் ரயில்களைப் போல புதிய வசதி: பயணிகளின் திண்டாட்டத்துக்கு முடிவு

அடுத்த பேருந்துநிறுத்தம் என்ன என்பது குறித்து பேருந்துகளில் அறிவிக்கும் வசதி விரைவில் அறிமுகமாகவிருக்கிறது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.


சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த பேருந்துநிறுத்தம் என்ன என்பது குறித்து பேருந்துகளில் அறிவிக்கும் வசதி விரைவில் அறிமுகமாகவிருக்கிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 6,000 பேருந்துகளில் ஜியோ-கோடிங் செய்து, பேருந்து நிறுத்தங்களைக் கண்டறியும் வசதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறைவு பெற்றுவிட்டது. தற்போது 500 பேருந்துகளில் அந்த அமைப்புகளை நிறுவும் பணி தொடங்கியுள்ளது.

இதற்காக, ஒவ்வொரு பேருந்துகளிலும் ஆறு ஸ்பீக்கர்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களை அறிவிப்பதற்கான அமைப்புகளை நிறுவும் பணி நடைபெறும். பிறகு படிப்படியாக அனைத்துப் பேருந்துகளுக்கும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

முதற்கட்டமாக, அடுத்த பேருந்துநிறுத்தம் குறித்த அறிவிப்புகள் தமிழில் மட்டுமே அறிவிக்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு, பிறகு மேம்படுத்தப்படும் போது ஆங்கிலத்திலும் அறிவிக்கும் வகையில் மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த அறிவிப்பானது, ஒரு பேருந்து நிறுத்தம் வருவதற்கு 200 முதல் 250 மீட்டர் தொலைவு இருக்கும் போது பேருந்தில் அறிவிக்கப்படும். விரைவில் அனைத்து விதமான பேருந்துகளிலும் இந்த வசதி வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி முதற்கட்டமாக 37ஜி என்ற பேருந்தில் சோதனைமுறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 602 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 6,026 நிறுத்தங்கள் (பணிமனை மற்றும் பேருந்துநிலையங்கள் உள்பட) உள்ளன. இரண்டு பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே சராசரியாக 500 முதல் 600 மீட்டர் இடைவெளி இருக்கும். தற்போது 200 முதல் 250 மீட்டருக்கு முன்பே பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

ஏற்கனவே சென்னை புறநகர் ரயில்களிலும், மெட்ரோ ரயில்களிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளுக்கு பேருதவியாக இருந்து வரும் நிலையில், பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், முன்பின் தெரியாத இடங்களுக்குச் செல்லும் பயணிகள், தங்களது பேருந்து நிறுத்தத்தில் சரியாக இறங்க வசதியாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com