சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கான உதவித் தொகை நுழைவுத் தேர்வில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி,
அரசமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் பட்டியிலிடப்பட்ட 22 மொழிகளிலும் தேர்வு நடத்தி சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு (ஓபிசி, சீர்மரபினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்) ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 வரை கல்விக்கான உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்ளையும் உள்ளடக்கும் விதமாக கடந்த 2021ம் ஆண்டு இத்திட்டம் பிஎம்-இதன் யாஸஸ்வி என்ற பெயரிலில் மறுசீரமைக்கப்பட்டது.
இதில், புகழ்பெற்ற பள்ளிகளில் சேர்க்கை பெறும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான உதவி துணை திட்டத்திற்கு, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யாஸஸ்வி என்ற தேசிய நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்தது.
அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முதல் 2022 கல்வியாண்டிற்கான தேசிய நுழைவத் தேர்வுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. இதற்கான நுழைவுத் தேர்வு வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டும் நுழைவுத் தேர்வை நடத்துவது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் பாரபட்சமான முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில், மேல்நிலை வகுப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்காக தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது. பல்வேறு மொழிகளின் பிறப்பிடமான இந்தியாவில், இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் மத்திய அரசு இந்த பாரபட்சமான முறையை விடுத்து, அரசமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் பட்டியிலிடப்பட்ட 22 மொழிகளிலும் தேர்வு நடத்தி சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.