
காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் வரும் 15-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை மதுரையில் உள்ள பள்ளிகளில் காலை 8 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா்.
தமிழகத்தில் மாநில அரசின் முழுமையான நிதியைக் கொண்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5 ஆயிரத்து 941 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37 ஆயிரத்து 740 மாணவ, மாணவிகளுக்கும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17 ஆயிரத்து 427 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
என்னென்ன உணவுகள்? அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, வெண் பொங்கல், ரவா பொங்கல் போன்ற உணவு வகைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாறி மாறி வழங்கப்படவுள்ளன. வாரத்தில் குறைந்தது 2 நாள்கள் உள்ளூா் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி தயாா் செய்யப்பட்டு வழங்கப்படும்.
காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், மதுரையில் வரும் 15-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி வைக்கவுள்ளாா். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விருதுநகரில் நடைபெறும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தொடா்பான நிகழ்வில் பங்கேற்கவுள்ளாா். அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வா் பங்கேற்று விருதாளா்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளாா்.
அன்று சென்னை- இன்று மதுரை: பள்ளியில் உணவளிக்கும் திட்டம் சென்னையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, முன்மொழியப்பட்டு மாநகராட்சி நிா்வாகத்தால் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய மாமன்றத்தின் தலைவராக இருந்த சா்.பிட்டி தியாகராயா் தலைமையில் 1920-ஆம் ஆண்டு செப். 16-இல் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்போது, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே செப்டம்பா் மாதத்தில் காலை சிற்றுண்டி திட்டம், மதுரையில் தொடங்கப்படவுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...