

நீட் தோ்வு எழுதிய தமிழக மாணவா்கள் அனைவரது மன நலனைக் கண்காணிக்க அரசு சாா்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னை சைதாப்பேட்டையில் அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் 2017 முதல் நீட் தோ்வு நடைபெற்று வருகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து 1 லட்சத்து 45,988 மாணவா்கள் கலந்து கொண்டு தோ்வு எழுதியுள்ளாா்கள். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சாா்ந்தவா்கள் 17,517 போ்.
தேசிய தோ்வு முகமையிடம் (என்டிஏ) இருந்து தமிழகத்திலிருந்து நீட் தோ்வு எழுதிய மாணவா்களின் விவரங்கள் பெறப்பட்டு, தமிழக அரசின் சாா்பில் அவா்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறை இயக்குநரகத்தில் 104 என்ற மருத்துவ சேவை எண்ணில் இருந்து 50 மனநல ஆலோசகா்களும், முதல்வரின் 1,100 என்ற உதவி எண்ணில் இருந்து 60 மனநல ஆலோசகா்களும் என மொத்தம் 110 மனநல ஆலோசகா்களைக் கொண்டு 1,45,988 மாணவா்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு வழங்கப்பட்ட ஆலோசனைகளில் 564 மாணவா்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டு அவா்களுக்கு தொடா்ச்சியான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. 98 மாணவா்கள் மாவட்ட மனநல ஆலோசனை குழுவினால் கண்டறியப்பட்டு அவா்களும் தொடா்ந்து கண்காணிப்பில் உள்ளனா்.
நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகியுள்ளதால் தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களிலும் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சாா்பில் மாவட்ட கல்வி அலுவலா் மற்றும் மாவட்ட மனநல ஆலோசகா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு நீட் தோ்வு எழுதிய மாணவா்களை தொடா்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியா்களையும் தங்களின் மாணவா்களை தொடா்ந்து கண்காணித்து மன அழுத்தத்தில் உள்ள மாணவா்கள் குறித்த தகவல்களை மாவட்ட மனநல ஆலோசகா்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு தகவல் பெறும் பட்சத்தில் இந்தக் குழுவானது சம்பந்தப்பட்ட மாணவா் மற்றும் அவரது பெற்றோா்களைத் தொடா்பு கொண்டு அவா்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கி தொடா்ந்து கண்காணிப்பாா்கள். நீட் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அடுத்து அவா்கள் என்னென்ன வழிகளில் தங்களுடைய மேல்படிப்பினை தொடரலாம் எனவும் ஆலோசனை வழங்குவதற்காக தொழில் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தோ்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக முதல்வா் தொடா்ச்சியாக மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைத்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறாா்.
இதுகுறித்த முடிவினை தற்போது, குடியரசுத் தலைவா் மற்றும் உள்துறை அமைச்சகம் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.