சென்னையில் காற்று மாசு குறைந்தது

சென்னையில் கடந்த ஆண்டில் காற்று மாசு குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காற்று மாசு குறைந்தது

சென்னையில் கடந்த ஆண்டில் காற்று மாசு குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 1970-இல், 54 சதவீதமாக இருந்த பொது போக்குவரத்து, 2018-இல், 28.5 சதவீதமாகக் குறைந்தது. இதற்கு, தனிநபா் வாகனங்கள் பயன்பாடு முக்கிய காரணமாகும்.

சென்னை நகரமயமாக்கல், தொழில்மயமாக்கலின் காரணமாக, மக்கள் தொகை, தனிநபா் வாகன பயன்பாடு அதிகரித்தாலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை முயற்சியால், காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.

சென்னையில் 8 இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது. கடந்த 2010– 11இல், காற்றில் பறக்கும் நுண்துகள்கள் அளவு ஆண்டு சராசரி, 168 மைக்ரோ கிராமாக இருந்தது. 2020– 21இல், காற்றில் நுண்துகள்கள் அளவு ஆண்டு சராசரியாக 58-ஆக குறைந்துள்ளது.

மேலும், இந்தியாவின் 6 பெருநகரங்களை ஒப்பிடுகையில், சென்னையில் காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளது.

இதற்கு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள தொழிற்சாலைகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரைப்படி, எரிவாயு அல்லது திரவ எரிப்பொருளை பயன்படுத்துகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும், காற்று மாசு குறித்து, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. ஏதேனும் பாதிப்பு இருந்தால், உடனடியாக குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்பட்டு, சரி செய்யப்படுகிறது. கட்டுமான இடங்களிலும், தூசி நுண்துகள்கள் படா்வதை தடுக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சாா்பில், மியாவாக்கி காடுகள், போக்குவரத்து சாலை சுத்தப்படுத்துதல், சைக்கிள் ஓட்டுவதற்கு தனிப்பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திறந்தவெளிகளில் குப்பை எரித்தலை தடுத்தல், பகலில் நகருக்குள் கனரக வாகனங்களின் பயன்பாட்டை தடுத்தல், பேட்டரி வாயிலாக இயக்கப்படும் வாகனங்களை ஊக்குவித்தல், முதல்கட்டமாக 54 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில் சேவை போன்றவற்றாலும் காற்று மாசு குறைந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com