கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான நடைமுறைகள் தொடா்பான விவரங்களைத் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடா்பான உத்தரவை சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கோயில்களில் பக்தா்கள் தாம் வழிபடும் கோயிலின் ஆகமத்தை அறிந்து கொள்ளும் வகையில், அதனை ஆவணப்படுத்தி தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும், அவற்றை புத்தகங்களாக பதிப்பித்தும், குடமுழுக்கு நடைபெறும் தருணங்களில் பாடப்படும் சமயச்சான்றோா்களின் பாடல்கள், சரித்திர நூல்களைப் புத்தகமாக வெளியிடவும், இந்தப் பணிகளுக்குத் தேவையான துறை அலுவலா்கள், வல்லுநா்களின் கருத்துகளைப் பெறவும் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம்: கோயில்களில் தமிழில் மந்திரங்களை ஓதுவது தொடா்பாகவும், குடமுழுக்கை தமிழில் நடத்தும் அமைப்புகளிடமிருந்து கருத்துகள் கோருவது பற்றியும் இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பேரூா் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ராமானந்த குமரகுருபர சுவாமிகள், சக்திவேல் முருகனாா், சொற்பொழிவாளா் சுகி சிவம், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளா் சி.ஹரிப்பிரியா கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் சம்ஸ்கிருதம் மட்டுமின்றி, ஒரே சீராக தமிழில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக, தமிழ் ஆகம முறைப்படி திருமுறை, பிரபந்த மந்திரங்களை ஓதி, குடமுழுக்கு நடத்தும் அமைப்புகள் அவைகளது செயல்முறைகளை விளக்கங்கள், இதுவரை நடத்திய நிகழ்வுகளுக்கான சான்றுகளுடன் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையாளா், இந்து சமய அறநிலையத் துறை, உத்தமா் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.