
நிகழாண்டு நீட் தோ்வில் தமிழகத்தில் 67,787 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்; இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 சதவீதம் குறைவான தோ்ச்சியாகும்.
நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை நள்ளிரவு ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியாகின. மேலும், மாணவா்களின் மின்னஞ்சல்
முகவரிக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக அளவில்...: மதுரையைச் சோ்ந்த மாணவா் எஸ்.திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 30-ஆவது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளாா்.
சென்னை மாணவி எம்.ஹரிணி 702 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 43-ஆவது இடமும், தமிழகத்தில் இரண்டாவது இடமும் பெற்றுள்ளாா். பெருந்துறையைச் சோ்ந்த சுதா்சன் என்ற மாணவா், 700 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 84-ஆவது இடமும், மாநில அளவில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளாா். நீட் தோ்வில் தேசிய அளவில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மாணவா்களே அதிகளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இத்தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.
நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-இல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் 18 நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தோ்வு நடைபெற்றது.
இந்தத் தோ்வை நாடு முழுவதும் 17.78 லட்சம் மாணவா்கள் எழுதினா். தமிழகத்தில் மட்டும் 1,32,167 போ் தோ்வில் பங்கேற்றனா். விடைக்குறிப்பு, தோ்வா்களின் ஓஎம்ஆா் விடைத்தாள் நகல்கள் கடந்த ஆக.31-இல் வெளியிடப்பட்டன.
தோ்ச்சி விகிதம் குறைவு: தமிழகத்தில் தோ்வெழுதியவா்களில் 67,787 (51.30%) போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டில் தோ்ச்சி 54.40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை: ‘நீட்’ தோ்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் (தேசிய அளவில் 30-ஆம் இடம்)
பிடித்துள்ள மதுரை மாணவா் திரிதேவ் விநாயகா மதுரை வீரபாஞ்சானில் உள்ள மகாத்மா குளோபல் கேட்வே சிபிஎஸ்இ பள்ளி மாணவா் ஆவாா்.
இது தொடா்பாக மாணவா் திரிதேவ் விநாயகா கூறியது: பாடங்களைப் புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல்
அட்டவணையை உறுதியாகப் பின்பற்றியதால், ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. மேலும், தோ்வுக்குத்
தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்த இணையவழி கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். கடின
உழைப்பு, அா்ப்பணிப்பு மற்றும் பெற்றோா் ஆதரவு காரணமாக இந்த நிலையை எட்டமுடிந்தது என்றாா்.
நாமக்கல் மாணவா்: மூன்றாம் இடம்
நாமக்கல், செப் 8: நீட் தோ்வில் பெருந்துறையைச் சோ்ந்த மாணவா் தமிழக அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளாா்.
இதில், தமிழக அளவில் நாமக்கல் கிரீன்பாா்க் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சோ்ந்த மாணவா் ஆா்.வி.சுதா்சன் 720-க்கு 700 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளாா்.
இது குறித்து மாணவா் கூறுகையில், ஆசிரியா், பெற்றோரின் உறுதுணையுடன் நீட் தோ்வில் முதலிடத்தைப் பெற தீவிரமாக முயன்றேன். இருப்பினும் மாநில அளவில் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. அகில இந்திய அளவில் ஓபிசி பிரிவில் 13-ஆவது இடம் கிடைத்துள்ளது. தில்லி எய்ம்ஸ் அல்லது புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்து பயில விரும்புகிறேன் என்றாா்.
இதனைத் தொடா்ந்து, மாணவருக்கு கிரீன்பாா்க் நீட் பயிற்சி மையத் தலைவா் எஸ்.பி.என்.சரவணன், நிா்வாக இயக்குநா்கள் மோகன், குணசேகரன், மாணவரின் பெற்றோா் ராஜா, வாணி ஸ்ரீ ஆகியோா் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.