தமிழக அரசு எப்படி பணியாற்றுகிறது? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்கக் கூடாது என்று பணியாற்றி வருகிறோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக அரசு எப்படி பணியாற்றுகிறது? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தமிழக அரசு எப்படி பணியாற்றுகிறது? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற நிலையை அடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்கக் கூடாது என்று பணியாற்றி வருகிறோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவருமான முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று மதுரை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அமைச்சர் பி. மூர்த்தியின் இல்லத் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்று சொல்வார்கள் இல்லையா? ஒரு கல்லில் இரண்டு அல்ல, பல மாங்காய்களை அடிப்பார் நம்முடைய அமைச்சர் மூர்த்தி. மதுரைக்கு ஒரு முக்கியத்துவம் தரவேண்டும் என்று முடிவுசெய்து, மூர்த்திக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று முடிவுசெய்தோம். ஆனால் எனக்கு ஒரு பயம் வந்தது. ஏனென்றால் அவர் ரொம்ப கோபக்காரர். அப்படிப்பட்டவருக்கு எப்படித் தருவது? என்றொரு அச்சம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். அதனால் அவருக்குத் தரலாம் என்று முடிவுசெய்தோம். அப்படி முடிவுசெய்த நேரத்தில், எந்தத் துறையைத் தரலாம், எந்த இலாகாவை அவரிடத்தில் ஒப்படைக்கலாம் என்று யோசித்தபோது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறையை வழங்கலாம் என்று முடிவுசெய்து அந்த இலாகா அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அச்சத்தோடுதான் தந்தோம். பயம் இருந்துகொண்டே இருந்தது எனக்கு. ஆனால் அந்தத் துறையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி அவர்களுடைய செயலைப் பார்த்தபோது, பொறுமையின் சிகரமாகவே மாறிவிட்டார் அவர். என்னுடைய எதிர்பார்ப்பைவிட ரொம்ப சிறப்பாக; இன்னும் சொல்லப் போனால், அரசுக்கு வருவாயை ஈட்டக்கூடிய வகையில், ஏற்கனவே நிதிப்பற்றாக்குறையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது நமது அரசு, இந்தச் சூழ்நிலையில், அவருக்கு இருக்கக்கூடிய அதிகாரிகள் ஒத்துழைப்போடு, மிகச் சிறப்பாக, அரசுக்குப் பல்வேறு வகையில் வருவாய் வரக்கூடிய வகையில், பல பணிகளை நிறைவேற்றித் தந்திருக்கிறார்.

நான் எப்போதுமே பொதுக்கூட்டங்களுக்கு, மாநாடுகளுக்குச் செல்லும்போது சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு போவேன். ஏனென்றால் குறிப்புகளில் ஏதும் தவறு வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை நான் தயாரித்துக்கொண்டு போவேன். திருமண நிகழ்ச்சிக்கெல்லாம் நான் குறிப்பு எடுத்துக்கொண்டு வரமாட்டேன். ஆனால் இந்தத் திருமண நிகழ்ச்சிக்குக் குறிப்போடு வந்திருக்கிறேன். ஏனென்றால், அவ்வளவு சாதனைகளை அந்தத் துறையின் சார்பில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் செய்துகாட்டியிருக்கிறார்.

* பதிவுத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 13 ஆயிரத்து 913 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை. 
* பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை (Control Room) உருவாக்கப்பட்டது.
* திங்கட்கிழமை தோறும் பதிவு குறைதீர்ப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இவை கடந்த ஆட்சியில் இல்லை, நாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான், மூர்த்தி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகுதான்.
* அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வந்து செல்ல வசதியாக சாய்தள வசதிகள் (Ramp) அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
* பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்து நடைமுறையாக இருந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் உயர்மேடைகள் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டிருக்கிறது என்றால் அது நம்முடைய ஆட்சியில்தான். திராவிட மாடல் ஆட்சியில்தான்.
* எழுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பதிவிற்கு வரும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
* இதைவிட முக்கியமாக, கடந்த காலத்தில் போலியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இரத்து செய்யவேண்டும் என்று, நான் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் அவர்கள் அதிகாரிகளோடு வந்து சொல்லி, அந்த ஆய்வு நடத்தி, அதன் பிறகு, அமைச்சரவைக் கூட்டத்தில் பேசி, சட்டமன்றத்திலும் விவாதித்து, உரிய சட்ட திருத்தம் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசு தலைவர் உடனடியாகத் தனது ஒப்புதலல் தந்திருக்கிறார். இதுவும் ஒரு சாதனை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. நம் மாநிலத்தில் எப்படி நிறைவேற்றினோம் என்று கேட்டு எல்லா மாநிலத்தின் முதலமைச்சர்களும், எல்லா மாநிலத்தின் அமைச்சர்களும், இன்றைக்கு நம்மை அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.
* சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகள், பொதுமக்கள் எளிதில் அணுகும் விதமாகச் சீரமைக்கப்பட்டுள்ளது.
- இப்படி அமைச்சர் மூர்த்தி அவர்களின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மூர்த்தி பெரிதா கீர்த்தி பெரிதா என்று கேட்பார்கள். என்னைப் பொறுத்தவரை, கீர்த்தி பெரியதாய் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் மூர்த்தி பெரியவர்தான். இப்படித்தான், நம்முடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கக் கூடிய ஒவ்வொரு அமைச்சர்கள் அத்தனை பேருமே, போட்டி போட்டிக்கொண்டு, அவர்களின் துறையின் சார்பில் இன்றைக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய காட்சியை நான் மட்டுமல்ல, இந்த நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com