ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்

ராணி எலிசபெத்துக்காக எடின்பரோ கோமகன் பிலிப்பின் உடல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்தது.
ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்

பிரிட்டன் ராணி எலிசபெத் உடலும், அவரது மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் அரசமரியாதையுடன் அருகருகே நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றன. எடின்பரோ கோமகன் பிலிப்பின் உடல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராணி எலிசபெத்துக்காக காத்திருந்தது.

பிரிட்டன் ராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். 

கோடைக் கால ஓய்வுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சென்று, ஸ்காட்லாந்திலுள்ள பால்மரால் அரண்மனையில் அவா் தங்கியிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார்.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார். தற்போது இந்த தம்பதியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராணி எலிசபெத் மரணத்துக்குப் பிறகு, ராணி - மன்னரின் உடல்கள் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் ராணியின் விருப்பம். அதனை அவர் முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தார்.

இளவரசர் பிலிப் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 99வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் முதலில் விண்ட்ஸர் கோட்டையில் செயின்ட் ஜார்ஜ் சாப்பலில் குடும்ப உறுப்பினர்கள் இறுதி மரியாதை செலுத்த அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

பிறகு, அவரது விருப்பப்படி, மிக எளிமையாக அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பிறகு, இளவரசர் பிலிப்ன் உடல் தி ராயல் வால்ட்டில் உள்ள சாப்பலில் வைக்கப்பட்டது. அதுநாள் முதல் இதுவரை எடின்பரோ கோமகன், ராணி இரண்டாம் எலிசபெத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராணி இரண்டாம்  எலிசபெத், உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று மருத்துவர்கள் அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் நேற்று காலமான ராணி  இரண்டாம் எலிசபெத்த்தின் உடல் லண்டன் எடுத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவரது உடல் 5 நாள்களுக்கு அரசியல் தலைவர்கள், உலக  தலைவர்கள், மக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் பிரிட்டன் அரசியல் தலைவர்களும் பிறகு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்ற சமிஞ்சை வார்த்தையுடன், ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

இதன் மூலம் ராணி - மன்னரின் இறுதிப் பயணமும் ஒரே இடத்தில் நிறைவு பெறுவதற்கான தருணம் வந்துவிட்டது. விண்ட்ஸர் கோட்டையின் கிங் ஜார்ஜ் ஆறாவது மெமோரியல் சேப்பலில் ராணி எலிசபெத் - இளவரசர் பிலிப் உடல்கள் அருகருகே நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றன.

இதற்காக, ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இருக்கும் ராயல் வால்ட்டில் இருந்து, மெமோரியலுக்கு மாற்றப்பட உள்ளது. இங்குதான் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெற்றோரான ஆறாம் ஜார்ஜ், ராணி எலிசபெத்தின் உடல்களும், இரண்டாம் ராணி எலிசபெத்தின் சகோதரி மார்கரெட்டும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ராணி எலிசபெத்தின் அரசுமரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச் சடங்குகள் அனைத்தும் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படும் என்றும், அன்று பிரிட்டனில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி  செலுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுமரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்த பிறகு, ராணியின் உடல் விண்ட்ஸர் காஸ்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ்ஜின் சாப்பலுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு எடின்பரோ கோமகன் பிலிப்பின் உடலுடன்   ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அருகருகே நல்லடக்கம் செய்யப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com