26 வயதில் எலிசபெத் ராணியானபோது...

பிரிட்டனில் மிக நீண்ட காலம் அரசியாக இருந்துமறைந்த எலிசபெத், நாட்டின் ராணியாகப் பட்டமேற்றபோது வயது வெறும் 26-தான்!
பிரிட்டன் ராணி எலிசபெத்.
பிரிட்டன் ராணி எலிசபெத்.

பிரிட்டனில் மிக நீண்ட காலம் அரசியாக இருந்துமறைந்த எலிசபெத், நாட்டின் ராணியாகப் பட்டமேற்றபோது வயது வெறும் 26-தான்!

சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் பிரிட்டிஷ் மன்னரான ஆறாம் ஜார்ஜ், மூளையில் ரத்தநாளங்கள் வெடித்ததால் உறக்கத்திலேயே உயிர்துறந்தார்.

மன்னர் ஆறாம் ஜார்ஜ் மறைவைத் தொடர்ந்து ராணியாக அறிவிக்கப்பட்டார் எலிசபெத். அவர் ராணியாக அறிவிக்கப்பட்டபோது லண்டனிலிருந்து நாலாயிரம் மைல்களுக்கு அப்பால் கிழக்கு ஆப்பிரிக்கக் காட்டில், கணவர் எடின்பரோ கோமகனுடன், இருந்தார் எலிசபெத். தகலறிந்ததும் இருவரும் விமானத்தில் லண்டன் புறப்பட்டுவந்தனர்.

ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு ஆண் குழந்தைகள் இல்லை. இரு மகள்கள். மன்னரின் மறைவைத் தொடர்ந்து, உடனடியாக மூத்த மகளும் பட்டத்து இளவரசியுமான எலிசபெத் ராணியாக அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தின் வயது 26. தற்போது மன்னராகும் சார்லஸுக்கு அன்று மூன்று வயதுதான், அவர் பட்டத்து இளவரசரானார். 76 வயதில் தற்போது மன்னராகும் சார்லஸ்தான் மிக அதிக காலம் இளவரசராகவே இருந்தவராக இருப்பார், 73 ஆண்டுகள்!

பிரிட்டனில் விக்டோரியா ராணிக்குப் பின் அரச பதவியையேற்ற இரண்டாவது பெண்மணி எலிசபெத். ஏற்கெனவே ஒரு எலிசபெத் (இவருடைய தாய்) ராணியாக இருந்திருப்பதால் இவர் இரண்டாம் எலிசபெத் என்றழைக்கப்பட்டார்.

எலிசபெத் ராணியாகக் காரணம், அவருடைய தந்தையான ஆறாம் ஜார்ஜ் எதிர்பாராத விதத்தில் மன்னராகப் பதவியேற்க வாய்த்ததுதான்.

உள்ளபடியே மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் இரண்டாவது மகன்தான் ராணி எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ். அவர் மக்களுடன் கலந்து எளிய குடிமகனாகவே வாழ விரும்பினார்.

ஐந்தாம் ஜார்ஜ் மறைவுக்குப் பிறகு இளவரசரான இவருடைய மூத்த சகோதரர் எட்டாம் எட்வர்ட் (விண்ட்ஸர் கோமகன்) தான் பிரிட்டன் மன்னராகப் பொறுப்பேற்றார். ஆனால், அவரோ ஏற்கெனவே ஒருவரை விவாகரத்து செய்து இன்னொருவரிடம் விவாகரத்துப் பெறக் காத்திருந்த அமெரிக்கப் பெண்ணான  வேலிஸ் சிம்சன் என்பவரைக் காதலித்தார், கரம் பிடிக்கவும் விரும்பினார். ஆனால், அதை யாரும் ஒப்புக்கொள்ளாத நிலையில், அவர் தன்னுடைய காதலுக்காக அரச பதவியைத் துறந்து (வெறும் 326 நாள்கள்தான் இவர் மன்னராக இருந்தார். பிரிட்டனில் மிகக் குறைந்த காலம் மன்னராக இருந்தவரும் இவர்தான்) வெளியேறினார்.

இதைத் தொடர்ந்துதான் மிகவும் துணிச்சலானவர் என்றறியப்பட்ட, இளையவரான ஆறாம் ஜார்ஜ், பெரிய விருப்பம் ஏதுமில்லாமல் மன்னராகப் பொறுப்பேற்றார்.

மன்னர் ஆறாம் ஜார்ஜுக்கு இரண்டு மகள்கள் மட்டுமே. மூத்தவர் எலிசபெத், இளையவர் மார்கரெட். ஆறாம் ஜார்ஜுக்குப் பிறகு அரச பதவியேற்க வேண்டும் என்பதால், தொடக்கத்திலிருந்தே எலிசபெத்துக்கு ராணிக்குரிய பயிற்சியளிக்கப்பட்டு வந்தது.

பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே கற்றவர் எலிசபெத். மன்னர் ஆறாம் ஜார்ஜ், வட ஆப்பிரிக்கப் போரைப் பார்வையிடச் சென்றபோது, தன்னுடைய 18 வயதிலேயே, மன்னரின் கடமைகளைக் கவனித்துக் கொண்டவர். போர்க் காலத்தில் பெண்களின் பின்னரங்கப் படையில் சேர்ந்தும் சேவையாற்றியிருக்கிறார். மன்னர் ஜார்ஜ் உடல்நலக் குறைவாக இருந்தகாலத்தில் அவருடைய பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். குதிரைச் சவாரியிலும் காரோட்டுவதிலும் தேர்ச்சி பெற்றவர் எலிசபெத்.

ஆங்கிலத்துடன் பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவரான எலிசபெத்துக்குக் கலை இலக்கியங்களிலும் ஆர்வம் மிகுதி. புகைப்பழக்கம், மதுப் பழக்கமும் இல்லை.

1947-ல் கிரீஸ் இளவரசர் பிலிப்பை மணந்தார் எலிசபெத். பின்னர், பிலிப் எடின்பரோ கோமகன் என்றழைக்கப்பட்டார்.

1952 பிப்ரவரி ஆறாம் நாள், தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவைத் தொடர்ந்து ராணியாக அறிவிக்கப்பட்டுப் பொறுப்பேற்றார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ராணியாக ஆட்சி செய்தார் எலிசபெத்.

நிறைவாழ்வு வாழ்ந்த அரச தம்பதியரில் எடின்பரோ, கடந்த ஆண்டு ஏப்ரலில் காலமானார். மிக நீண்ட காலம் ராணியாகப் பதவி வகித்த புகழுடன் மறைந்த எலிசபெத்தின் உடலும் கணவரின் உடலும் அருகருகே அடக்கம் செய்யப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com