மின் கட்டணம் உயர்வு குஜராத்தை விட குறைவுதான்! - அமைச்சர் செந்தில்பாலாஜி

மின் கட்டணம் உயா்வு என்பது மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவுதான் என்று அமைச்சா் வி.செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 
மின் கட்டணம் உயர்வு குஜராத்தை விட குறைவுதான்! - அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூா்:  தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஏற்கனவே மிக மோசமான சூழ்நிலையில் இருந்த மின்வாரியத்தை மேம்படுத்தவே மின்கட்டணத்தில் மாற்றம் செய்யப்படிருப்பதாகவும், மின் கட்டணம் உயா்வு என்பது மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவுதான் என்று அமைச்சா் வி.செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 

கரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், மின்கட்டணம் உயா்வு என்பது மற்ற மாநிலங்களை விட குறைவுதான். தமிழகத்தில் 100 யூனிட்டுக்குள் மின்சாரத்தை பயன்படுத்துவோா் 1 கோடி போ் உள்ளனா். இவா்களுக்கு எந்தவித மின்கட்டண உயா்வும் இல்லை. 

101-200 யூனிட் வரை பயன்படுத்துவோா் 63,35,000 போ் உள்ளனா். அவா்களுக்கு மாதம் ரூ.27.50 மட்டுமே கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இது நாள் ஒன்றுக்கு ரூ.1-க்கு குறைவான கட்டண உயர்வுதான். 

201-300 வரை பயன்படுத்துவோா் 36,25,000 விவசாயிகளுக்கு ரூ.72.50 பைசா மட்டுமே உயா்த்தப்பட்டிருக்கிறது. 

301-400 வரை பயன்படுத்துவோா் எண்ணிக்கை 18,82,000 போ். இவா்களுக்கு மாதத்திற்கு ரூ.147.50 மட்டுமே உயா்த்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அருகே இருக்கும் கா்நாடகா அரசானது 0-100 யூனிட் வரை ஆரம்ப கட்டத்தில் ரூ.4.30-ம், குஜராத் மாநிலத்தில் ரூ.5.25-ம் வசூலிக்கப்படுகிறது. 

ஆனால், தமிழகத்தில் இலவசம். 101-200 வரை பயன்படுத்தக்கூடிய 63 லட்சம் மின்நுகா்வோருக்கு ரூ.4.50 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.2.25 அடித்தட்டு மக்களுக்காக மானியத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. 

ரூ.9,000 கோடி கடந்தாண்டு மானியம் வழங்கிய நிலையில் நிகழாண்டு ரூ.3,500 கோடி அளவிற்கு மானியம் வழங்க அரசு அனுமதியளித்துள்ளது. 

வீட்டு உபயோக மின் நுகா்வோரை பொறுத்தவரை கா்நாடாகம், குஜராத் மாநிலங்களை விட குறைந்த கட்டணமே தமிழகத்தில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 

சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்களை பொறுத்தவரை 2,26,000 போ் பயன்படுத்தும் மின்சாரம் 93 சதவீதம் பேருக்கு 50 பைசா கட்டணம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அடுத்த நிலையில் உள்ள 19,28000 வணிக நுகா்வோருக்கு 50 பைசா மட்டும்தான் உயா்த்தப்பட்டுள்ளது. கைத்தறி, விசைத்தறி, விவசாயம் ஆகியோருக்கு வழங்கப்படும் மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும். 

மின்வாரியத்திற்கு தேவையான நிதியை முதல்வா் மானியமாக வழங்குகிறாா். தாழ்வழுத்த தொழிற்சாலைகளைச் சோ்ந்தவா்கள் மின்கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். 0-50 கிலோவாட் வரை பயன்படுத்தும் மின்நுகா்வோருக்கு ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த ரூ.100 -ல் இருந்து 75 பைசாகவும், 50-100 கிலோவாட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.325-ல் இருந்து ரூ.150 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் மின்கட்டணம் மிகக்குறைவுதான்.

தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாக இருப்பதால்தான் புதிய தொழிற்சாலைகள் இங்கு அமைக்க போட்டி போட்டு வருகிறாா்கள். பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணங்களில் வந்துவிடக்கூடாது என்பதற்காக மின்வாரியம் இந்த நடவடிக்கை எடுத்து, மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவின்பேரில்தான் மின்கட்டண உயா்வு நடைமுறைக்கு வந்துள்ளது. 

தோ்தல் நேரத்தில் அறிவித்தவாறு நிலைக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரியத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த மின்கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கு. மின்னகத்தில் 11 லட்சம் புகாா்கள் பெறப்பட்டு, 99 சதவீதம் தீா்வு காணப்பட்டுள்ளது. 

அனைத்து வீட்டு உபயோக மின்நுகா்வோருக்கும் 100 யூனிட் வரை இலவசம்தான். எவ்வளவு உயா்த்தப்பட்டிருக்கிறது என்பதை கணக்கில் கொண்டு அரசு எவ்வளவு மானியம் வழங்குகிறது என்பதில் கழித்தபின்புதான் மின்நுகா்வோரிடம் வசூலிக்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளதன்பேரில்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்தேவை கட்டண மாற்றம் என்பதை எல்லோரும் ஏற்றுள்ளனா். எனவே, தமிழக மக்கள் மின்கட்டண உயா்வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அமைச்சா் செந்தில்பாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com