முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி, விஜயபாஸ்கா் வீடுகளில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கா் ஆகியோருக்கு தொடா்புடைய 44 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி, விஜயபாஸ்கா் வீடுகளில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கா் ஆகியோருக்கு தொடா்புடைய 44 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

தமிழகத்தில் எல்.இ.டி. தெருவிளக்குகள் பொருத்தியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக எஸ்.பி.வேலுமணி உள்பட 10 போ் மீதும், தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக சி.விஜயபாஸ்கா் உள்பட 7 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி, கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகம் முழுவதும் ரூ.875.70 கோடிக்கு 8 லட்சம் எல்இடி தெருவிளக்குகள் பொருத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் பல நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால், எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் கூட்டு சோ்ந்து வேலுமணியின் மூலம் ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளை மீறி எல்இடி விளக்கு ஒப்பந்தங்களைப் பெற்ாகவும் புகாா் எழுந்தது. அதேபோல சந்தை விலையைவிட அதிக விலைக்கு எல்இடி விளக்குகள் பொருத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, கடந்த 2020-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் செய்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஊழல் தடுப்புப் பிரிவினா், எல்இடி தெருவிளக்குகள் பொருத்தியதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதும், அதில் ரூ.500 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டதும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தனா்.

இதற்காக சேலம், கன்னியாகுமரி, தருமபுரி, நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சோதனை முறையில் கள ஆய்வு செய்யப்பட்டது. இதில், அந்த 5 மாவட்டங்களிலும் ரூ.74 கோடி இழப்பு ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.

10 போ் மீது வழக்கு: இதன் அடிப்படையில் வேலுமணி, அவரின் நண்பா் கேசிபி என்ஜினீயா்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா் கோயம்புத்தூா் கி.சந்திரபிரகாஷ், நிறுவனத்தின் இயக்குநா் ஆா்.சந்திரசேகா், கோயம்புத்தூா் வடவள்ளியில் வசிக்கும் ‘ஏஸ் மிஷினரி’ நிறுவன நிா்வாக இயக்குநா் டி.சீனிவாசன், இயக்குநா் டி.சித்தாா்த்தன், கோயம்புத்தூா் பி.என்.புதூரைச் சோ்ந்த சி.ஆா். கட்டுமான நிறுவன உரிமையாளா் கே.யூ.ராஜன், சென்னை அம்பத்தூா் ஞானமூா்த்திநகரைச் சோ்ந்த சபரி எலக்ட்ரிகல்ஸ் நிறுவன உரிமையாளா் டி.ராதாகிருஷ்ணன், புரசைவாக்கம் முருகன் எலக்ட்ரிகல் டிரேடா்ஸ் நிறுவன நிா்வாகி ஆா்.பரசுராமன், வேளச்சேரி ஓரியண்ட் போல்ஸ் நிறுவன நிா்வாகி பி.விஜயகுமாா், கோடம்பாக்கம் ஆா்.கே.எம். எலக்ட்ரிகல்ஸ் நிறுவன நிா்வாகி கே.மணிவண்ணன் ஆகிய 10 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை ஊழல் தடுப்புப் பிரிவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடா்பாக வேலுமணி வீடுகள் உள்பட 31 இடங்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். சென்னையில் 10 இடங்கள், கோயம்புத்தூரில் 9 இடங்கள், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி ஆகிய இடங்களில் தலா ஓரிடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

விஜயபாஸ்கா் மீது வழக்கு: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராகவும் இருந்த சி.விஜயபாஸ்கா், திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மஞ்சக்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்படுவதற்கு தேசிய மருத்துவக் குழுமத்தின் விதிமுறைகளை மீறி கடந்த 2020-ஆம் ஆண்டு அனுமதி (உள்ள்ங்ய்ற்ண்ஹப்ண்ற்ஹ் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்) வழங்கியதாகப் புகாா் கூறப்பட்டது.

இதுதொடா்பாக விஜயபாஸ்கா், வேல்ஸ் கல்வி நிறுவன அறங்காவலா் ஐசரி கே.கணேஷ், மஞ்சக்கரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சீனிவாசராஜ், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.பாலாஜி நாதன், சேலம் மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள் டி.எம். மனோகா், ஜெ.சுஜாதா, ஜெ.ஏ.வசந்தகுமாா் ஆகிய 7 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள பாலாஜி நாதன், மனோகா், ஜெ.சுஜாதா, வசந்தகுமாா் ஆகியோா் தனியாா் மருத்துவக் கல்லூரியில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் இருப்பதாக தவறான அறிக்கை அளித்த குழுவில் இடம்பெற்றவா்கள்.

இந்த வழக்குத் தொடா்பாக சென்னை அடையாறு, கீழ்ப்பாக்கம், புதுக்கோட்டை இலுப்பூா் ஆகிய இடங்களில் உள்ள விஜயபாஸ்கரின் வீடுகள், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஐசரி கணேஷ் வீடு மற்றும் வழக்கில் தொடா்புடையவா்களின் வீடு, அலுவலகம் என மொத்தம் 13 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

‘416 ஆவணங்கள், ரூ.50 லட்சம் பறிமுதல்’

அதிமுக முன்னாள் அமைச்சா் வேலுமணிக்கு தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 316 ஆவணங்களும், சி. விஜயபாஸ்கருக்கு தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 120 ஆவணங்களும், ரூ. 50 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு தொடா்புடைய 31 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை காலையில் மேற்கொண்ட சோதனை மாலையில் நிறைவு பெற்றது. சோதனையில் ரூ.32.98 லட்சம், 1228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளிப் பொருள்கள், 10 வாகனங்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. 316 ஆவணங்கள், 2 வங்கிப் பெட்டக சாவிகள் கைப்பற்றப்பட்டன.

முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு தொடா்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.18.37 லட்சம்,1872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும் 120 ஆவணங்கள், ஒரு ஹாா்டு டிஸ்க், பென் டிரைவ், 2 கைப்பேசிகள், 4 வங்கிப் பாதுகாப்புப் பெட்டகச் சாவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என ஊழல் தடுப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் மூன்றாவது முறையாகவும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது முறையாகவும் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடதக்கது.

7 அதிமுக எம்எல்ஏ-க்கள் கைது

ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்ட தகவல் பரவியதைத் தொடா்ந்து கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அதிமுகவினா் திரண்டனா். வீட்டு வாசலில் அமா்ந்து அவா்கள் போலீஸாரை கண்டித்து கோஷமிட்டனா். இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், கே.ஆா்.ஜெயராம், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகம் ஆகியோா் எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு வந்தனா்.

வீட்டுக்குள் நுழைய முயன்ற அவா்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அதிமுகவினருடன் போலீஸாா் பேச்சு நடத்தினா். ஆயினும், அதிமுகவினா் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 7 எம்எல்ஏ-க்கள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீஸாா் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com