அதிமுக அலுவலக மோதல்: இபிஎஸ் ஆதரவாளா்களுக்குஎதிரான வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவு

அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா் ஜே.சி டி. பிரபாகா் தாக்கல் செய்த வழக்கில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா் ஜே.சி டி. பிரபாகா் தாக்கல் செய்த வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த ஜே.சி.டி. பிரபாகா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக் குழு நடைபெற்றபோது, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் பன்னீா்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்குள் செல்ல முயற்சித்தாா்.

ஆனால், அங்கு கூடியிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலாளா்களான தி.நகா் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் ஆகியோா் எங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனா்.

மேலும் கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் எங்களைத் தாக்கினா். இதுதொடா்பாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்துக்குள் இருந்த முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்தனா்.

நடந்த உண்மை இவ்வாறு இருக்க, எங்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது. எனவே, இதுதொடா்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலாளா்களுக்கு எதிராக நாங்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு உள்துறை செயலாளா், காவல் துறை டிஜிபி , ராயப்பேட்டை காவல் ஆய்வாளா் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com