திருச்சியில் 'பெரியார் உலகம்' - அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

பெரியாரின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்துக்கு அடிக்கல் நாடினார். 
திருச்சியில் 'பெரியார் உலகம்' - அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

பெரியாரின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்துக்கு அடிக்கல் நாடினார். 

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொண்டாடப்படுகிறது. 

பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர். 

பின்னர் பெரியார் திடலுக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காணொலி மூலமாக திருச்சி பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்தில் பெரியார் நூலகம், ஆய்வகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. 

விழாவில் பேசிய முதல்வர், 'கோட்டையிலே சமூக நீதியினுடைய உறுதிமொழியை எடுக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு பத்து நிமிடம் உரையாற்றிவிட்டு உங்களிடமிருந்து விடைபெற வேண்டும் என்ற  நிலையில் உங்கள் அனுமதியோடு நான் நின்று கொண்டிருக்கிறேன்.

பெரியார் திடலுக்கு வந்திருக்கிறேன், என்று சொன்னால் நான் எனது தாய் வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்றுதான் பொருள். தாய் வீட்டுக்கு மகன் வருவது ஆச்சரியம் அல்ல. பெரியார் திடலுக்கு வருவதன் மூலமாக, உள்ளபடியே சொல்கிறேன், நாங்கள் புத்துணர்ச்சி பெறுகிறோம், உற்சாகம் அடைகிறோம், எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்கிறோம். 

செப்டம்பர் 17-ஆம் நாள் அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாள் என்பதற்காக, அந்த நாளில் மட்டும் இந்தத் திடலுக்கு நாங்கள் வந்தவர்கள் அல்ல, என்றைக்கும் வந்திருக்கிறோம், என்றைக்கும் வந்துகொண்டிருப்போம். ஆக, இப்படி அடிக்கடி வரக்கூடியவர்கள் நாங்கள். அடிக்கடி வருவதால் எங்களை விருந்தினர் என்று சொல்ல முடியாது. நாங்களும் இந்த வீட்டிற்கு உரியவர்கள், இந்த வீட்டைச் சார்ந்தவர்கள், அந்த முறையில்தான் வந்திருக்கிறோம். 

திராவிடர் கழகத்துக்கு மட்டும் பெரியார் திடல் தலைமையகம் அல்ல, இந்தத் தமிழினத்திற்கே இதுதான் தலைமையகம் என்று சொல்லத்தக்க வகையில் இந்தத் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

சமூகநீதியின் தலைமையகமாக –
சமத்துவத்தின் தலைமையகமாக -
பகுத்தறிவின் தலைமையகமாக -
தமிழின எழுச்சியின் தலைமையகமாக-
பெண்ணுரிமையின் தலைமையகமாக – 
இந்தப் பெரியார் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – இந்தியாவினுடைய சமூகநீதிக்காகவும் தலைமையகமாகத்தான் இந்தப் பெரியார் திடல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தொடங்கி, அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் இந்தப் பெரியார் திடலுக்கு வராத தலைவர்களே நிச்சயமாக இருக்க முடியாது. இத்தகைய வரலாற்றைப் படைத்துக் காட்டியிருக்கக்கூடிய பெரியாரை உலகத் தலைவராக உயர்த்திக் காட்டவே “பெரியார் உலகம்” என்பதை பேராசிரியர் அன்பழகன் தொடங்கியிருக்கிறார்.

பெரியார் உருவாக்கியது பெரியார் திடல். அய்யா ஆசிரியர் அவர்கள் உருவாக்கியிருப்பது  பெரியார் உலகம். அத்தகைய உலகச் சிறப்புமிக்க பெரியார் உலகத்தின் அடிக்கல் நாட்டக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது, நான்  பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார் கொள்கை வாழக்கூடிய காலமெல்லாம் என் பெயரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இப்போதே நான் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறேன், பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன், புலங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறேன். 
பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை, சமூகநீதி நாளாக நான் அறிவித்து, அந்த நாளில் எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறேன். இது பெரியாருக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்று மட்டும் நீங்கள் கருத வேண்டாம் - இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை! இந்த நாட்டுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை!  

அதேபோல் பெரியாரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடவும் இருக்கிறோம் என்பதை நான் அன்றைக்கு அறிவித்திருக்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெரியாருடைய சிந்தனைகளைத் தேடித் தேடி அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பெரியார் ,  உலகத்தலைவர் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல – உலகம் முழுமைக்குமான தலைவராக நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், “பெரியார் உலகம்” என்று நம்முடைய ஆசிரியர் அவர்கள் இதற்குப் பெயர் சூட்டி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலமாக பெரியாருக்கு இணையான புகழை நம்முடைய ஆசிரியர் அவர்களும் நிச்சயமாக பெறுகிறார்கள், அதில் எந்த சந்தேகமும் கிடையாது.  பத்து வயதில் பெரியாரின் தொண்டராக இணைந்து, இந்த 90 வயதிலும் இளைஞராகவே தொண்டாற்றி, அப்படி தொண்டாற்றுகிற ஆசிரியரைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் பொறாமையாகக் கூட இருக்கிறது. இத்தகைய சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் என்ன காரணம் என்று கேட்டீர்களென்றால், அண்ணா ஒருமுறை சொன்னார்கள், 10 வயதிலேயே பகுத்தறிவின் பால் அருந்தியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள், அதனால்தான் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று அண்ணா அப்போதே சொல்லியிருக்கிறார். அதனால்தான் 90 வயதைத் தொடும்போது கூட அவர் உற்சாகமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்.

'வீரமணி என்றால் வெற்றி மணி' என்று நம்முடைய தலைவர் கருணாநிதி ஒருமுறை அவரைப் பாராட்டியிருக்கிறார். 'நாங்கள் செல்லும் பாதை பெரியார் திடல் பாதை தான்'. இதை நான் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். 

60 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக இருந்து நமக்கெல்லாம் நாளும் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார் நம்முடைய மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள். அத்தகைய திசைவழியே திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்ச் சமுதாயத்தை அறிவான சமூகமாக ஆக்கும் பணியை திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது. அந்த அறிவான தமிழ்ச் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளையும் உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கித் தரக்கூடிய கடமையைத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நிச்சயமாக செய்யும். 

இதுவே பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளில், நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய உறுதிமொழி! 

அந்த உறுதிமொழியுடன் நம்முடைய கடமை ஆற்றுவோம்!
உறுதிமொழி எடுக்க நான் கோட்டைக்குச் செல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com