பெருங்களத்தூர் மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் செங்கல்பட்டு-சென்னை வழித்தட பாலப்பகுதியையும் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
பெருங்களத்தூர் மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் செங்கல்பட்டு-சென்னை வழித்தட பாலப்பகுதியையும் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று (17.09.2022)  தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில், ரூ.78.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் வேளச்சேரி புறவழிச்சாலை - வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதியையும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெருங்களத்தூர் இரயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு – சென்னை வழித்தடப் பாலப்பகுதியையும் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.145.49 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரியில் விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையினை இணைத்து மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி இரண்டு அடுக்கு மேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட இருவழிதட ஒரு வழி மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து 1028 மீட்டர் நீளத்தில் ரூ.67 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் அடுக்கு மேம்பாலப்பணி முடிக்கப்பட்டு,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 01.11.2021 அன்று திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது, வேளச்சேரியில், 78.49 கோடி ரூபாய் செலவில் வேளச்சேரி புறவழிச்சாலை - வேளச்சேரி – தாம்பரம் சாலையை இணைத்து 640 மீட்டர் நீளத்தில் முதல் அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், வேளச்சேரி விஜயநகர சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும். மேலும் கிண்டி, சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, தகவல் தொழில்நுட்ப சாலை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு இப்பாலம் பயனுள்ளதாக அமையும்.

அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருங்களத்தூர் இரயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு – சென்னை பாலப்பகுதி கட்டப்பட்டுள்ளது.

இம்மேம்பாலம் நீள்வட்ட சுற்றுப்பாதையுடன் கூடிய நான்கு பாலப்பகுதியை உடையது. இதில் ஒரு பாலப்பகுதி சென்னை – செங்கல்பட்டு வழித்தட போக்குவரத்திற்கும், மற்றொரு பாலப்பகுதி செங்கல்பட்டு – சென்னை வழித்தட போக்குவரத்திற்கும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சீனிவாசராகவன் தெரு பகுதிக்கு ஒரு பாலப்பகுதியும், தாம்பரம் கிழக்கு புறவழிச் சாலை பகுதிக்கு மற்றொரு பாலப்பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு – சென்னை பாலப்பகுதி 743 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட இருவழிதட ஒரு வழி மேம்பாலமாகும். இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு – சென்னை மார்க்கத்தில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் தாம்பரம், சென்னை விமான நிலையம், கிண்டி, கோயம்பேடு மற்றும் சென்னையின் இதர பகுதியினைச் சேர்ந்த மக்களும் மிகுந்த பயனடைவார்கள். 

இந்த நிகழ்ச்சியில்,  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் திரு.பி.ஆர்.குமார், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) பெருநகரம் திரு. ரெ.கோதண்டராமன், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திரு. இரா.சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 22 பேருக்கு அறநிலையத்துறையில் பணி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com