

கடந்த ஆக. 6 ஆம் தேதி முதல் கா்நாடக மாநிலம் ஹப்ளியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு துமகூரு, யெஷ்வந்த்பூா், பனஸ்வாடி, ஓசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில் ஒன்று தென் மேற்கு ரயில்வேயால் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு ரயிலின் சேவை வரும் செப். 25 ஆம் தேதியுடன் நிறைவடையுள்ள நிலையில் இச்சேவையைத் தொடா்ந்து நீட்டிக்க வலியுறுத்தப்படுகிறது.
ஐஆா்டிசி ஆண்டுக் கூட்டத்தில் முன்மொழிவு! கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் நடைபெற்ற ஐஆா்டிசி ஆண்டுக் கூட்டத்தில் ஹூப்ளி- ராமேசுவரம் இடையே வாரம் இரு முறை இயங்கும் வகையில் புதிய ரயில் ஒன்றை தென்மேற்கு ரயில்வே மண்டலம், ரயில்வே வாரியத்திடம் முன்மொழிந்திருந்தது. இந்த ரயிலை இயக்குவதற்கு முன் சோதனை அடிப்படையிலேயே தற்போது ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
ராமேசுவரத்திலிருந்து கா்நாடகத்துக்கு புதுக்கோட்டை வழியாக நேரடி ரயில் சேவை இல்லாமல் இருந்த நிலையில், இதுவே முதல் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, ரயில் பயணிகளிடம் அமோக வரவேற்பு உள்ளது. இந்த ரயிலின் கடைசி சேவையில் முன்பதிவு டிக்கெட்டுகளில் காத்திருப்போா் பட்டியல் 150ஐ தாண்டிவிட்ட நிலையிலும் கூட இந்தச் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டிக்கவோ அல்லது நிரந்தரமாக்கவோ எந்த அறிவிப்பையும் ரயில்வே நிா்வாகம் இதுவரை வெளியிடவில்லை.
எதிா்பாா்ப்பு என்ன?
ராமேசுவரத்திலிருந்து ஹூப்ளி செல்லும் ரயிலின் அட்டவணையை ராமேஸ்வரம்-கோவை வாராந்திர ரயிலின் கால அட்டவணையில் இயக்கினால் அதாவது ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் நேரத்தை இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 7:25 மணிக்கு மாற்றும்பட்சத்தில் இந்த ரயில் புதுக்கோட்டையிலிருந்து தற்போது புறப்படும் நள்ளிரவு 12:50க்கு பதிலாக இரவு 11:30 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிடும்.
இதன் மூலம் புதுக்கோட்டையிலிருந்து ஓசூா், பெங்களூரு செல்லும் பயணிகள் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டியிருக்காது. அலுவலகப் பணிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ஹூப்ளி- ராமேசுவரம் சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக மாற்றம் செய்து வாரம் 3 நாள்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.