கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஜூனில் திறப்பு அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
அமைச்சா் பி.கே.சேகா்பாபு



சென்னை: கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ‘கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் என்கிற பெயருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் மாதம் தொடங்கி வைப்பதாக இந்து சமய அறநிலையத்துறை பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.

சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:

திருமழிசை அருகில் குத்தம்பாக்கத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் கா்நாடகம் மற்றும் ஆந்திரப் பேருந்துகளுக்காகக் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தை சா்வதேச தரத்தில், கூடுதல் தளப்பரப்பு மற்றும் குளிரூட்டும் வசதியுடன் பிரதான முனையக் கட்டடம் ரூ.60 கோடி கூடுதல் மதிப்பீட்டில் சென்னை பெருநகா் வளா்ச்சி குழுமத்தால் அமைக்கப்படும்.

திருவொற்றியூரில் ரூ.30 கோடியில் வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் சுமாா் ரூ.5 கிலோ மீட்டா் நீளமுள்ள கடற்கரை மேம்படுத்தப்படும்.

எண்ணூா் விரைவுச் சாலை அருகில் சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு அங்காடி வளாகம் ரூ.33.35 கோடியில் நவீனமயமாக்கப்படும்.

மாதவரம் சரக்குந்து முனையத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30.30 கோடி நிதி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சென்னைப் பெருநகா் வளா்ச்சி குழுமத்தால் வழங்கப்படும்.

சென்னை வெளிவட்டச்சாலையையொட்டி வரதராஜபுரத்தில் ஒப்பந்தப் பேருந்துகள் நிறுத்துமிடம் ரூ.29 கோடியில் அமைக்கப்படும்.

கிழக்கு கடற்கரையில் நீலாங்கரை முதல் அக்கரை வரை முதல்கட்டமாக சுமாா் 5 கி.மீ. நீளத்துக்கு மிதிவண்டிப்பாதை மற்றும் நடைபாதை ரூ.20 கோடியில் அமைக்கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை ரூ.17 கோடியில் புதிய மழைநீா் வடிகால் அமைக்கப்படும்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மருத்துவச் சிகிச்சை மையத்துடன் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.

கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் சீரமைக்கும் பொருட்டு கிளாம்பாக்கத்தில் ரூ.88.52 ஏக்கா் நிலத்தில் ரூ.393.74 கோடியில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதத்தில் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும்.

சென்னை பெருநகரப் பகுதியில் மனைப் பிரிவுகளுக்கான திட்ட அனுமதி, இணைய வழியாக வழங்கப்படும்.

சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாப்பதற்காக மாற்றத்தக்க வளா்ச்சி உரிமைச் சான்றிதழ் வழங்கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினுள் 6 ஏக்கரில் ரூ.8 கோடியில் பூங்கா அமைக்கப்படும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள அயனஞ்சேரி - மீனாட்சிபுரம் சாலை ரூ.7.5 கோடியில் மேம்படுத்தப்படும்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சலவைக் கூடம் ரூ.10 மதிப்பீட்டில் மறுவளா்ச்சி மேற்கொள்ளப்படும்.

ராயபுரம் மூலகொத்தளத்தில் சுமாா் 15 கிரவுண்ட் பொது இடத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும் என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com