தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பு: அன்புமணி கண்டனம்

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
Updated on
1 min read

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும், கழிவுகளை கலந்ததற்காக கர்நாடகத்திடமிருந்து  இழப்பீடு  வசூலிக்க வேண்டும்  என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக நுரைகள் வருகின்றன. தொலைவிலிருந்து பார்த்தால் மேகக் கூட்டமோ என்று  எண்ணும் அளவுக்கு வரலாறு காணாத வகையில் வேதிக்கழிவுகளின் நுரைகள்  தென்பெண்ணை ஆற்றில் கலந்து வருவது பெரும் கவலையளிக்கிறது!

ஆற்றில் செல்லும் நுரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு வேளாண் விளைநிலங்களில் விழுகின்றன. அதனால் பயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.  தென்பெண்ணை ஆற்றையொட்டிய குடியிருப்புகள் மீதும், பொதுமக்கள் மீதும் வேதிக்கழிவு நுரைகள் படுகின்றன. இதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் நகரக் கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் சட்டவிரோதமாக  தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவது தான்  இதற்கு காரணம் ஆகும். காவிரியிலும் இத்தகைய  கழிவுகள் கலப்பு பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதை கடந்த காலங்களில் கர்நாடக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.

காவிரியும், தென்பெண்ணையும் கர்நாடகத்தின் கழிவுநீர் சாக்கடையாக மாற்றப்படுவதை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது.  உரிய ஒழுங்குமுறை அமைப்புகளிடம் முறையிட்டு இதை தடுக்க வேண்டும். கழிவுநீர் கலப்பால் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com