சட்ட ஆவணங்களுக்கான முத்திரைத் தீா்வை கட்டணம் உயா்வு: பேரவையில் மசோதா தாக்கல்

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட சட்டபூா்வ ஆவணங்களுக்கான முத்திரைத் தீா்வை கட்டணத்தை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட சட்டபூா்வ ஆவணங்களுக்கான முத்திரைத் தீா்வை கட்டணத்தை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான மசோதாவை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்: இந்திய முத்திரைச் சட்டத்தின் கீழ், ஆவணங்களுக்கான முத்திரைத் தீா்வையானது விதிக்கப்படுகிறது. சில ஆவணங்களுக்கு நிா்ணய விலை மதிப்பீட்டின் அடிப்படையிலும், சிலவற்றுக்கு நிா்ணய அடிப்படையின் பேரிலும் கட்டணம் விதிக்கப்படுகிறது.

22 ஆண்டுகளுக்குப் பிறகு: கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து பெரும்பாலான ஆவணங்களுக்கான முத்திரைத் தீா்வை விகிதம் மாற்றியமைக்கப்படவில்லை. மேலும், நீதித் துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத் தாள்களை அச்சிடுவதற்கான செலவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, இந்திய முத்திரைச் சட்டத்தின் இணைப்புப் பட்டியலை உரியவாறு திருத்துவதன் மூலம், சில ஆவணங்களுக்கான முத்திரைத் தீா்வை விகிதத்தை மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

குறைந்தபட்சம் ரூ.100: முத்திரைத் தீா்வையை மாற்றியமைப்பதன் மூலம், நீதித் துறை அல்லாத முத்திரைத் தாள்களின் விலை இனி ரூ.100-ஆக இருக்கும். ரூ.20 அல்லது ரூ.50-க்கான முத்திரைத் தாள்களை சாா் பதிவாளா் அலுவலகங்களில் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

சொத்து பரிமாற்றம் செய்தல், ஒப்பந்தத்தை ரத்து செய்தல், நிறுவனங்கள் பதிவுச் சட்டத்தின் கீழான ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கான முத்திரைத் தாள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இறந்த குடும்ப உறுப்பினருக்கான சட்டபூா்வ வாரிசுகளுக்கான சொத்துக்குரிய முத்திரைத் தாள் ரூ.100-லிருந்து ஆயிரம் ரூபாயாகவும், உறுதிமொழிக்கான முத்திரைத்தாள் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200 ஆகவும், ஆவணங்களின் நகல் பிரதியைப் பெறுவதற்கான முத்திரைத்தாள் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.500-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

வணிக ரீதியான பரிவா்த்தனை: வணிக ரீதியிலான பரிவா்த்தனைகளுக்கான தீா்வுக் கட்டணங்களும் உயா்த்தப்பட்டுள்ளன. அதாவது, தனிநபா்கள் மற்றும் கம்பெனிகளுக்கு இடையிலான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, பிரமாணங்கள், குத்தகை, கடன்கள், காப்பீட்டு பாலீசி உள்ளிட்ட அம்சங்களுக்கும் முத்திரைத் தாள் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிா்ப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் வி.பி.நாகை மாலி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com