இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம்: முதல்வர்

சமூகப் போராளி இளையபெருமாளை சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated on
2 min read

சமூகப் போராளி இளையபெருமாளை சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில், விதி 110-ன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், 
சமூக சீர்திருத்தத்தின் பெருமைமிகு தலைவர்களான அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சகஜானந்தர் ஆகியோர் வரிசையில் கம்பீரமாக நின்று போராடியவர்களில் ஒருவர்தான் பெரியவர் எல். இளையபெருமாள். நந்தனை மறித்த சிதம்பரம் மண்ணில் பிறந்து, நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்காக அடைபட்டு இருந்த உரிமை வாசலைத் திறந்தவர் இளையபெருமாள். பள்ளியில் படிக்கும் போது இரட்டைப் பானை முறையை பார்க்கிறார். பள்ளிக்குள் மறைந்திருந்து இரவு நேரத்தில் பானைகளை உடைக்கிறார் இளையபெருமாள். இப்படி அவர் தொடர்ச்சியாக உடைத்ததால்தான், இரட்டைப் பானை முறை அந்தக் காலத்தில் அந்த வட்டாரத்தில் நீக்கப்பட்டது.

இராணுவத்தில் சேர்கிறார், அங்கும் பாகுபாடு காட்டப்பட்டது. உடனடியாக, துணிச்சலோடு உயர் அதிகாரிக்குப் புகார் செய்கிறார்; அந்தப் பாகுபாடு களையப்படுகிறது. ஓராண்டு காலத்திலேயே இராணுவத்தில் இருந்து விலகி மக்கள் பணியாற்ற வந்துவிடுகிறார்.

ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டம் - தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 1970 வரையில் நடந்த மிகப்பெரிய சமூகப் போராட்டங்களை நடத்தியவர் பெரியவர் இளைய பெருமாள் அவர்கள். பட்டியலின மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட இவரது போராட்டங்கள்தான் காரணம். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இளைய பெருமாள் அவர்களுக்கு, சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில், 1952 ஆம் ஆண்டு, கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது; வெற்றியும் பெற்றார். அப்போது அவருக்கு வயது 27. தில்லி சென்ற இளையபெருமாள் அவர்கள், அம்பேத்கர் அவர்களைச் சந்திக்கிறார். இவ்வளவு இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி வந்திருக்கிறீர்களே? அந்த மக்களுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார்.

தென்னார்க்காடு மாவட்டம், தஞ்சை மாவட்டங்களில்தான் நடத்திய மக்கள் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை இவர் பட்டியல் போட்டுச் சொன்னதைக் கேட்டு, அம்பேத்கரே வியப்படைந்திருக்கிறார்கள், இளையபெருமாள் அவர்களைப் பாராட்டி இருக்கிறார்கள்.

1980 முதல் 1984 வரை சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர் பெரியவர் இளையபெருமாள் அவர்கள். அவரது பெரும் சிறப்புகளில் மிக முக்கியமானது; பட்டியலின பழங்குடி மக்களின் மேன்மைக்கான 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை அவர் வகித்ததுதான். மூன்றாண்டு காலம் இந்தியா முழுமைக்கும் பயணம் செய்து, சாதிக் கட்டமைப்பையும், தீண்டாமைக் கொடுமையையும் ஆய்வு செய்தார்கள். அந்த அறிக்கையானது இந்தியச் சமூக அமைப்பின் சாதிய வேர்களை மறைக்காமல், துல்லியமாக வெளிப்படுத்தும் அறிக்கையாக அமைந்திருந்தது. எனவே, இந்த அறிக்கை வெளியே வருவதைத் தடுக்க சிலர் முயற்சித்தார்கள். அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் அன்று அவரது அறையில் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்து தப்பி வந்து அறிக்கையைத் தாக்கல் செய்தார் பெரியவர் இளையபெருமாள் அவர்கள். இப்படி நடக்கும் என்று தெரிந்து, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் அவர்களிடம் அறிக்கையின் பிரதியைக் கொடுத்து வைத்திருந்தார் இளைய பெருமாள். அதனால்தான் அந்த அறிக்கையை அன்றையதினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிந்தது.

பிற்காலத்தில் கொண்டு வரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு அடித்தளமே பெரியவர் இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கைதான்.

சாதிய வன்முறை ஒடுக்கப்பட வேண்டும்; அனைத்து சமூகங்களின் ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்; சமத்துவ, சுயமரியாதைச் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக உழைத்த பெரியவர் இளையபெருமாள் அவர்களின் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீண்டாமையை ஒழிக்க சாதி அமைப்பின் ஆணிவேரை வெட்டியாக வேண்டும். அதற்கு சாதிய அமைப்பின் பிடிப்பை உடைத்தாக வேண்டும் என்ற பெரியவர் இளையபெருமாள் வழியில் சுயமரியாதைச் சமதர்ம சமூகத்தை அமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com