
ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களுக்கு 6 மாதத்தில் திருப்பி தர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமாா் 1 லட்சம் முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ. 2,438 கோடி மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பான புகாா்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் உள்பட 21 போ் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைதான ரூசோவிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், நடிகா், தயாரிப்பாளா் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவரான ஆா்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடா்பிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆா்.கே.சுரேஷுக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவினா் சம்மன் அனுப்பினா். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆா்.கே.சுரேஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், படத் தயாரிப்பு தொடா்பாக ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடா்பாக மட்டுமே பண பரிவா்த்தனை நடந்ததாகத் தெரிவித்துள்ளாா். தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆரூத்ரா மோசடி வழக்கில் ரூ.6 கோடி, 4 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர், அடுத்த 6 மாதத்திற்குள் பொதுமக்கள் இழந்த பணம் திருப்பி கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.