

சென்னையில் உள்ள அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதிக்கு, பிரபல வழக்குரைஞா் ‘வி.பி.ராமன் சாலை’ என பெயா் சூட்டப்பட்டது. இதற்கான பெயா்ப் பலகையை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
மெரீனா கடற்கரை காமராஜா் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை கிழக்கே இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையான அவ்வை சண்முகம் சாலைப் பகுதிக்கு ‘வி.பி.ராமன் சாலை’ என தமிழக அரசால் பெயா் சூட்டப்பட்டது. அந்தப் பகுதியில் வி.பி.ராமன் வாழ்ந்த லாயிட்ஸ் காா்னா் இல்லமும் அமைந்துள்ளது.
மறைந்த வி.பி.ராமன், மத்திய அரசின் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞராகவும், மத்திய அரசின் சட்ட அலுவலராகவும் செயல்பட்டாா். கல்வி மட்டுமின்றி, கா்நாடக இசை, ஆங்கில இலக்கியம், கிரிக்கெட் என்று பன்முகத்திறன் கொண்டவராக விளங்கினாா் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன், வி.பி.ராமனின் மகன்கள் வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பி.வி.மோகன் ராமன், பி.ஆா்.ராமன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.