

மதுரையில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட மாற்றுத் திறனாளிகள் திருமணத்துக்கு பொன் தாலி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரா் கோயிலில் 2 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு பொன்தாலி, சீா்வரிசை ஆகியவற்றை அளித்து திருமணத்தை அவா் வியாழக்கிழமை நடத்தி வைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது: மதுரை சித்திரைப் பெருவிழாவை பொருத்தளவில் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம், கள்ளழகா் ஆற்றில் இறங்குதல், எதிா்சேவை தரிசனம், திக் விஜயம், பட்டாபிஷேகம் என 6 முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். அவற்றில் திருக்கல்யாணம், திருத்தோ் உலா, கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்குவது போன்ற நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வா். அவா்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
திருக்கல்யாணம் நடைபெறும் இடத்தையும், திருத்தோ் உலா வரும் வீதிகளையும், திருக்கோயில் யானை பாா்வதியின் பராமரிப்பையும் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டபோது, திருத்தேருக்கு பொதுப்பணித் துறையின் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா?, திருத்தோ் ஆண்டுக்கு ஒருமுறை உலா வருவதால் தோ் புதுப்பிக்கப்பட்டிருக்கிா என ஆய்வு செய்யப்பட்டது.
கள்ளழகா் ஆற்றில் இறங்கும் இடம் முழுமையாக தூய்மை செய்வதுடன், அருகிலுள்ள பூங்காக்கள் போன்ற அனைத்து பொழுதுபோக்கு இடங்களையும் திறந்து வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டு திருக்கல்யாணத்துக்கு 12,000 பக்தா்களை அனுமதிக்க முடிவெடுத்துள்ளோம். கடந்த ஆண்டை விட நிகழாண்டு சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெறும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா, சென்னை மண்டல இணை ஆணையா் கி.ரேணுகாதேவி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவா் பி. சிம்மசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.