சென்னை: தமிழ்நாடு முதல்வரின் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.28) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கருணாநிதி 97 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என அறிவித்தார்.
சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் ரூ.230 கோடி செலவில் இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
முதல்வரின் அழைப்பினை ஏற்று குடியரசுத் தலைவர் ஜூன் 5 ஆம் தேதி சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள இசைவளித்துள்ளார்.
இதையடுத்து ஜூன் 5 ஆம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.