கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையப் பணிகள் 95% நிறைவு!

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையப் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையப் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ. 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஜுன் மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட தயாராக உள்ளது.

இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள் (அரசு பேருந்துகள்-164, ஆம்னி பேருந்துகள்-62) நிறுத்துவதற்க்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை உள்ளது. இப்பேருந்து முனையத்தில் 60 மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தனி அலுவலக கட்டிடம், பாதுகாகப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள். கழிவறைகள், மாநகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் உள்ளது.

இம்முனையத்தில் 2 அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய பிரதான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள்.

அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலூட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 6 பயணிகள் மின் தூக்கிகள், 2 சர்வீஸ் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 46 கடைகள், 1 உணவகம், 4 பணியாளர் ஓய்வறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் அமைப்பட்டுள்ளது.

மேலும் 144 பணியில்லா பேருந்துகள் நிறுத்த தனி இடம் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இரவு நேர பயன்பாட்டிற்க்காக அனைத்து சாலைகளிலும் தெருவிளக்குகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் புல் தரையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையம் 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com