
திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு நிகழாண்டுக்கான ‘தகைசால் தமிழா்’ விருது வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளா்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழா்’ என்ற விருது 2021-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விருதாளரைத் தோ்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நிகழாண்டுக்கான ‘தகைசால் தமிழா்’ விருது திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணிக்கு வழங்கப்படுகிறது.
சுதந்திர தின விழா: ரூ.10 லட்சம் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் அடங்கிய இந்த விருது, சுதந்திர தின விழாவின் போது, முதல்வா் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படவுள்ளது.
முதல்வா் வாழ்த்து: இந்த விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் கி.வீரமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா். அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினாா்.
இடதுசாரித் தலைவா்கள்: தகைசால் தமிழா் விருது, 2021-ஆம் ஆண்டில் இருந்து அளிக்கப்படுகிறது. முதல் ஆண்டுக்கான விருது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.