குகி மக்களை அகற்றி அவர்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்க பாஜக திட்டம்: கே.பாலகிருஷ்ணன்

மணிப்பூரின் குகி பழங்குடி மக்களை அகற்றிவிட்டு அவர்களின் நிலங்களை தனியார் பெரு நிறுவனங்களுக்கு வழங்க மத்திய, மாநில பாஜக அரசுகள் முயன்று வருவதாக  கே.பாலகிருஷ்ணன்  குற்றஞ்சாட்டியுள்ளார்.
குகி மக்களை அகற்றி அவர்களின் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்க பாஜக திட்டம்: கே.பாலகிருஷ்ணன்

கோவை: மணிப்பூரின் குகி பழங்குடி மக்களை அகற்றிவிட்டு அவர்களின் நிலங்களை  தனியார் பெரு நிறுவனங்களுக்கு வழங்க மத்திய, மாநில பாஜக அரசுகள் முயன்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து கோவையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அக்கலவரத்தை அரசுகளால் இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. இது மெய்தி - குகி மக்களுக்கு இடையேயான இன மோதல் அல்ல. இதனை இயக்கிக் கொண்டிருப்பது பாஜக அரசு தான்.

பாஜக அரசு கலவரத்தை தூண்டிவிட்டு விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது. மலைப் பகுதிகளில் உள்ள குகி மக்களை அகற்றிவிட்டு அவர்களின் நிலங்களை அம்பானி, அதானி போன்ற பெரு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க ஏற்பாடு செய்து கொண்டுள்ளனர்.

மணிப்பூர் முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.10  கோடி மதிப்பிலான நிவாரண பொருள்களை மணிப்பூர் மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருப்பதை பாராட்டுகிறோம்.

மணிப்பூர் அரசு அப்பொருள்களை வாங்கி விநியோகம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி சென்றடைய வேண்டும். வங்கதேச ஆயத்த ஆடைகளால் கோவை, திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு ஜவுளித் தொழில் முடங்கி உள்ளது. ஜவுளித் தொழிலை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு தயாராக இல்லை. நாடகம் நடிப்பதை போன்ற ஆட்சி மத்தியில் நடக்கிறது.

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல மறுக்கிறார். நாட்டில் மணிப்பூர், ஹரியாணா மாநிலங்களில் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமித்ஷா தமிழ்நாடு வந்து அண்ணாமலை நடைபயணத்தை துவக்கி வைக்கிறார். 

அண்ணாமலை நடைபயணம்தான் பாஜகவுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையா? பாஜக, பஜ்ரங்தள் போன்றவை பல மாநிலங்களில் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குகின்றன.

இப்படியான நிலையில் அமித்ஷா ஏன் உள்துறை அமைச்சராக நீடிக்க வேண்டும்? அண்ணாமலையின் நடைபயணம் நகைப்புக்குரியதாக இருக்கிறது. அரை கிலோ மீட்டர் தூரம் நடப்பதும், பின்னர் சொகுசு வாகனத்தில் செல்வதுமாக இருப்பதற்கு பெயர் நடைப் பயணமா? திமுக அரசை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும் என அவர் நடைப்பயணம் மேற்கொள்கிறார். பாஜக அரசிடம் சாதனை என சொல்ல எதுவும் இல்லை.

அண்ணாமலை நடந்தாலும், வானத்திற்கும் பூமிக்கும் குதித்தாலும் தமிழ்நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அவர்களுக்கு ஆத்ம திருப்தி ஏற்படலாம். வேறு யாருக்கும் அது பயன்படாது. அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்றில் எழுத மட்டுமே நடைப்பயணம் பயன்படும். கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது நல்ல கோரிக்கை.

அவ்வழக்கில் மர்ம முடிச்சுகள் உள்ளன. அது சாதாரண வழக்கு அல்ல. எனவே குற்றவாளிகளை கண்டுபிடித்து அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு உள்ளது.

சீமான் மதம், சாதி சார்ந்த மக்களை தரம் தாழ்த்திப் பேசுவது நல்லது அல்ல. அவரது பேச்சு வன்மையான கண்டனத்திற்கு உரியது. அவரது பேச்சை ஏற்று கொள்ள முடியாது. இஸ்லாமியர்கள், கிறித்தவர்களை கேவலப்படுத்தும் வகையில் சீமான் பேசுவது கண்டனத்திற்கு உரியது. சரத்பவார் பிரதமரை சந்தித்து இருப்பதால் இந்தியா கூட்டணிக்கு சேதாரம் வராது. கூட்டணியின் பலம் கூடி கொண்டிருக்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com