கொல்லிமலை: வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு மரியாதை!

கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  
கொல்லிமலை செம்மேட்டில் புதன்கிழமை மாலைகளால் நிரம்பிய வல்வில் ஓரி மன்னன் சிலை.
கொல்லிமலை செம்மேட்டில் புதன்கிழமை மாலைகளால் நிரம்பிய வல்வில் ஓரி மன்னன் சிலை.

நாமக்கல்: கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையானது, கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் இம்மலை உள்ளது.

வளம் கொண்ட மலை நாட்டையும், மழவர் எனும் வீரர்களைக் கொண்டவர் ஓரி. அவருக்கு ஆதன்ஓரி என்ற பெயரும் உண்டு. ஓரி எனும் பெயருடைய குதிரையை வைத்திருந்தார். வல்வில்ஓரி குறித்த தகவல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றினை, சிறுபானாற்றுப்படை ஆகிய நூல்களில் உள்ளன. வல்வில்ஓரியை பரணர், கபிலர், பெருஞ்சித்தரனார், கல்லாடனார், இடைக்கழிநாட்டு கல்லூர், நத்தத்தனார், ஆகிய சங்ககால புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி, வில்வித்தைகளில் சிறந்தவர் ஆவார். ஐந்து உயிரினங்களை ஒரே நேரத்தில் கொல்வதற்கு அம்பு விடும் வில்திறன் ஓரிக்கு மட்டுமே வாய்த்திருந்தது.  

கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரியின் புகழைப் போற்றும் வகையில் 1975–ஆ-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் ஆடி 17, ஆடி 18 ஆகிய தேதிகளில் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் மலை வாழ் மக்கள் மட்டுமன்றி சுற்றியுள்ள சமவெளிப்பிரதேச மக்களும் பங்கேற்று வருகின்றனர்.

இந்த இரு நாள்களிலும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மன்னர் வகையறாக்கள் என அழைக்கப்படுவோர் கொல்லிமலைக்கு வந்து வல்வில் ஓரி மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

அந்த வகையில் புதன்கிழமை 17 அமைப்புகளைச் சேர்ந்தோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். வியாழக்கிழமை மேலும் 18  அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்த காவல் துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர். இதனால் ஓரி மன்னன் சிலை அமைந்துள்ள கொல்லிமலை செம்மேடு பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com