போரூர் ஏரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.178.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போரூர் ஏரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.178.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (3.8.2023) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.71.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், போரூர் ஏரியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரி முதல் இராமாபுரம் ஓடை வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகள், அசோக் நகர் 4வது நிழற்சாலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பழவேற்காடு காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் 71 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணியானது, ஹிந்து காலனி 4வது தெரு மற்றும் எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் ஆரம்பித்து அதன் வழியாக நங்கநல்லூர் 100 அடி சாலை, நங்கநல்லூர் 46வது தெரு, நங்கநல்லூர் 6வது பிரதான சாலை குபேர முனுசாமி சாலை வழியாக வீராங்கள் ஓடையில் சென்றடைகிறது. இதன் மொத்த நீளம் 2.29 கிலோ மீட்டர் ஆகும். இதில் 1.78 கிலோ மீட்டர் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இப்புதிய மழைநீர் வடிகால் அமைப்பதன் மூலம் ஹிந்து காலனி, பி.வி நகர் மற்றும் நேரு நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் பயனடையும். 

தமிழ்நாடு முதல்வரால் கடந்த 12.4.2022 அன்று திறந்து வைக்கப்பட்ட S9 பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று முதல்வர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேவையான உதவிகளை செய்திடுமாறு காவல்துறையினரை அறிவுறுத்தினார்.

போரூர் ஏரியில் ஆய்வு

நீர்வளத்துறையின் பராமரிப்பிலுள்ள போரூர் ஏரியின் நீர்பரப்பு 252 ஏக்கர் ஆகும். இந்த ஏரியின் முழு கொள்ளவு 67 மில்லியன் கன அடி ஆகும். இதன் வலது கரையோரம் 25 மீட்டர் நீளத்திற்கு உபரி நீர் வழிந்தோடி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கரையின் நீளம் 3092 மீட்டர் ஆகும்.

பல வருடங்களாக போரூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரானது மௌலிவாக்கம், மதனந்தபுரம் மற்றும் முகலிவாக்கம் வழியாக சென்று முகலிவாக்கத்திலுள்ள இராமாபுரம் ஓடையில் கலந்து மணப்பாக்கம் மற்றும் இராமாபுரம் வழியாக சென்று அடையாறு ஆற்றில் சேரும்படி அமைந்திருந்தது. தற்பொழுது உபரி நீர் செல்லும் நிலங்கள் முழுவதும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டதாலும், ஏரியின் குறுக்கே புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாலும், ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போரூர் ஏரியின் மேற்கு  பகுதியில் அமைந்துள்ள கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், மற்றும் அய்யப்பதாங்கல்  கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழையின்போது மேற்கண்ட பகுதிகள் பெரும் வெள்ள பாதிப்புக்கு உள்ளானது. தமிழ்நாடு முதல்வர் கடந்த 4.12.2021 அன்று  போரூர் ஏரியின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்த போது, வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்

அதன்படி, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பருவமழைக் காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுப்பு பணிகள் மேற்கொள்ள
ரூ.250 கோடி நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் போரூர் ஏரி பகுதியில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் போரூர் ஏரியில் நடைபெற்று வரும் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரி முதல் இராமாபுரம் ஓடை வரை  புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பருவமழை தொடங்குவதற்கு முன் இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.  

கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட அசோக் நகர் 4-வது நிழற்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் கடந்த 2021-ஆம் மற்றும் 2022-ஆம் ஆண்டு பருவ மழையின் காரணமாக சாலையில் 2 அடி உயரத்திற்கு 10 நாட்களாக மழைநீர் தேங்கியது. அசோக் நகர் 4-வது நிழற்சாலையின் மழை நீரானது பழைய கால்வாயின் மூலம் போஸ்டல் காலனி வழியாக சுமார் 2.5 கி.மீ தொலைவு கடந்து ரெட்டிக்குப்பம் கால்வாய் வழியாக அடையாறு ஆற்றினை அடைந்தது. இதனால் மேற்கு மாம்பலம் பகுதியும் அதிகம் பாதிக்கப்பட்டது.

மேற்கண்ட மழைநீர் தேக்கத்தினை அகற்ற நிரந்தர தீர்வாக ஜாபர்கான்பேட்டை கால்வாய் வழியாக அடையாறு ஆற்றினை குறைந்த தொலைவில் சென்றடையும்படி மாற்றியமைக்கப்பட்டு தொழில்நுட்ப ஆலோசகரின் வடிவமைப்பின்படி 1.313 கி.மீ நீளத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 7 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அசோக் நகர் 4-வது நிழற்சாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை தமிழ்நாடு முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த மழைநீர் வடிகால் அமைப்பின் மூலம் தேங்கும் மழைநீர் ஜாபர்கான்பேட்டை கால்வாய் மூலம் அடையாறு ஆற்றினை விரைவாக சென்று சேரும். இதன்மூலம், அசோக் நகர் 4-வது நிழற்சாலை, 6-வது நிழற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைவெள்ளம் தேங்குவது முற்றிலும் தவிர்க்கப்படும்.

இந்த ஆய்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப., இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com