வெளிநாட்டில் உள்ள அகழ்வாய்வு பொருள்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்: நிதியமைச்சர்

வெளிநாடுகளில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருள்களை திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
வெளிநாட்டில் உள்ள அகழ்வாய்வு பொருள்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும்: நிதியமைச்சர்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு மூலம் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட பொருள்கள் அனைத்தும் விரைவில் இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்திய தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில், தொல்லியல் அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவுக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி முன்னிலை வகித்தார். தொல்லியல் துறை மண்டல இயக்குநர் அருண்ராஜ் வரவேற்றார். இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர் கிஷோர் குமார் பாஷா அறிமுக உரையாற்றினார்.

பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியக பணிகள் விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இங்கு கிடைத்த பொருள்களை வைத்து பார்க்கும்போது, கி.மு.1600 வருடம் பழைமையானவையாக உள்ளன. 

இங்கிருந்து பெர்லின் போன்ற வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளும் திரும்பப்பெறும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மணிப்பூர் விவகாரம் மனதிற்கு வேதனை தரக்கூடியதாக உள்ளது. இது முதல்முறை நடப்பதல்ல, இதுபோல பலமுறை நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் 3 நாள்கள் முகாமிட்டு, அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்து வந்து மக்களவையில் பேச தயாராக உள்ளநிலையில், எதிர்கட்சிகள் அவரின் பேச்சை கேட்க தயாராக இல்லை. அதேபோல, எதிர்க்கட்சியினரும் மணிப்பூருக்குச் சென்று, அங்குள்ள நிலைகளை பார்த்து வந்தனர். அது குறித்து மக்களவையில் பேசுவதில்லை. மக்களவையை சரியாக நடத்த வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் உள்ளது என்றார்.

இந்நிகழ்வில், மீன் வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, பாஜக தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிம்மசக்தி, ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் எஸ்.பார்வதி சங்கர் கணேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com