அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆக. 25 முதல் காலைச் சிற்றுண்டி!

முதல்வரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

முதல்வரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இந்த திட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு, தற்போதைய நிதிநிலை அறிக்கையில், மாணவர்களின் வருகை மற்றும் செயல்திறனானது இந்த திட்டத்தின் மூலம் அதிகரித்துள்ளதால் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தது. 

இந்த நிலையில், தற்போது, 1,978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டால், மொத்தம் உள்ள 31,008 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் 15,75,900 மாணவர்கள் பயனடைவார்கள். ரூ. 404 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் ஒவ்வொரு குழந்தைக்கும் தினமும் ரூ.12.71 செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத்துறையின் மூத்த அதிகாரி கூறினார். “தமிழக மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாங்கள் சமையல் பாத்திரங்களை வழங்கியுள்ளோம். தற்போது சமையலறைகள் தயாராக உள்ளன. இந்த திட்டத்தை நாகப்பட்டினத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். முதல்வர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்”  என்று அவர் மேலும் கூறினார்.

மதியம் உணவுத் திட்டத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்கனவே கண்காணித்து வந்த நிலையில், தற்போது ஊரக வளர்ச்சித் துறை  வெளியிட்டுள்ள அரசாணையில், வட்டார  வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (மதியம் உணவு) ஆகியோரும் இந்த திட்டப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் 100 மி.லி. காய்கறிகளுடன் சாம்பார் மற்றும்  150-200 கிராம் உணவு வழங்கப்படும். வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களைக் கொண்டு காலை உணவு வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு  காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com