மத்திய அரசின் உதவியை எதிர்நோக்கும் தென்னை நார்த் தொழில்: உற்பத்தி, ஏற்றுமதி சரிவால் கடும் பாதிப்பு

அழிவை நோக்கிச் செல்லும் தென்னை நார் தொழிலுக்கு மத்திய அரசு உதவி செய்து உயிர் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசின் உதவியை எதிர்நோக்கும் தென்னை நார்த் தொழில்: உற்பத்தி, ஏற்றுமதி சரிவால் கடும் பாதிப்பு


பொள்ளாச்சி: அழிவை நோக்கிச் செல்லும் தென்னை நார் தொழிலுக்கு மத்திய அரசு உதவி செய்து உயிர் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இதனால் தமிழகத்தில் தென்னை சார்ந்த தொழில் புறக்கணிக்க முடியாததாக உள்ளது. 

தென்னை மட்டையில் இருந்து நார் பிரித்து எடுப்பது,  நார்களைத் தரம் பிரிப்பது, நார் கழிவுகளில் இருந்து பித் எனப்படும் கட்டிகள் தயாரிப்பது, நார்களில் இருந்து பொம்மைகள், செடிகள் வளர்க்கும் தொட்டிகள், கால்மிதியடிகள், அழகுப் பொருள்கள் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது என தமிழகம் முழுவதும் சிறியது முதல் பெரியது வரையிலான 7,500 தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2,500 தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 1,700}க்கும் அதிகமான  தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டவை. பெரும்பாலான தொழிற்சாலைகள் வங்கிக் கடன் பெற்றே இயங்கி வருகின்றன.

20 லட்சம் மெட்ரிக் டன்.... தமிழகத்தில் ஆண்டுக்கு 6.42 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. தென்னை நார் பித் எனப்படும் கட்டிகள் 14 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாட்டுத் தேவைகளுக்கு 10 முதல் 20 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் இருந்து சீனா, அமெரிக்கா, கொரியா, நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 125 நாடுகளுக்கு தென்னை நார் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் 80 சதவீதத்துக்கும் மேல் சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் மற்றும் அது சார்ந்த பொருள்கள் ஏற்றுமதி சிறப்பாக நடைபெற்றது. ஏற்றுமதியின் மூலம் ஆண்டுக்கு ரூ.3,000 கோடிக்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைத்து வந்தது.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சரிவு... தற்போது தென்னை நார் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை நார், நார் கட்டி உற்பத்தி 20 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 14 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் கீழ் குறைந்துவிட்டது. 2022}23}ஆம் ஆண்டில் தென்னை நார் பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு ரூ.777 கோடியாக சரிந்துவிட்டது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் தென்னை நார் சார்ந்த பொருள்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்ப கடல் சார்ந்த பயணத்துக்கு கன்டெய்னர் கட்டணம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக இருந்தது. கரோனா பாதிப்புக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு ரூ.9 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை கட்டணம் உயர்ந்தது. இதனால், ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தற்போது கட்டணம் குறைந்தாலும் உற்பத்தி குறைந்து வர்த்தகம் பாதித்துள்ளது.

காரணங்கள்... இந்தப் பாதிப்புக்கு கரோனா நோய்த்தொற்று, ரஷியா}உக்ரைன் போர் போன்ற உலகளாவிய காரணங்கள் கூறப்படுகின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறை, உதிரிபாகங்கள் 30 சதவீதம் விலை ஏற்றம், வங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்வு, ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் 4 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைந்தது, மின்கட்டண உயர்வு, கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் வங்கிக் கடன்களை செலுத்த முடியாமல் வங்கிகளின் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது போன்ற பல்வேறு காரணங்கள் சேர்ந்து தென்னை நார் தொழிற்சாலைகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது.

உற்பத்தி நிறுத்தம்: தமிழகம் முழுவதும் உள்ள 7,500 தொழிற்சாலைகளில் 40 சதவீதம் தொழிற்சாலைகள் மேற்கண்ட காரணங்களால் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. சுமார் 500}க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 40 சதவீத தொழிற்சாலைகளில் 50 சதவீத உற்பத்தி குறைந்துள்ளது. 20 சதவீத தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன.

இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தென்னை நார் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பில் எழுந்துள்ளது.

கோரிக்கைகள் என்ன?

தென்னை நார் தொழிலுக்கு மத்திய அரசு உயிர் கொடுக்க வேண்டும் என எம்.பி.க்கள் தம்பிதுரை, சந்திரசேகர், எம்.எல்.ஏ. பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சக்திவேல் தலைமையில் விவசாயிகள் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், இளங்கோ ஆகியோர் கொண்ட குழு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தது.

தேசிய தென்னை நார் கூட்டமைப்புத் தலைவர் கௌதமன் கூறுகையில், தமிழகத்தில் தென்னைசார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்ய 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். வங்கிக் கடனை தவணை முறையில் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க 10 சதவீதம் மானியம் வழங்க வேண்டும், தென்னை நார் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் 12 நாடுகளுக்கு அரசு அதிகாரிகள் குழு சென்று ஆய்வு நடத்த வேண்டும், மண் இல்லா விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். உலக அளவில் தென்னை நார் இறக்குமதியாளர்களை அழைத்து கேரள மாநிலத்தைப்போல கண்காட்சி நடத்த வேண்டும். கட்சி வேறுபாடின்றி நிபுணர் குழு அமைக்க வேண்டும். உள்நாட்டுக் கருத்தரங்குகளில் எல்இடி திரை அமைத்து காட்சிப்படுத்த வேண்டும். 2,000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் என்றார்.

பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறுகையில், தமிழகத்துக்கு அதிக அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் தென்னை நார் தொழில் அழிவை நோக்கிச் செல்கிறது. ஆகவே, அதை அழிவில் இருந்து மீட்க உடனடியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து தொழிலை மேம்படுத்த வேண்டும், வங்கிக் கடன் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு விவசாயம் சார்ந்த தொழிலான தென்னை நார் தொழிலுக்கு உயிர்கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்றார்.

தேசிய தென்னை நார் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆதித்யா ஜெயராமசந்திரன் கூறியதாவது: பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை நார் தொழிலை மேம்படுத்த மத்திய அரசு உதவி புரிய வேண்டும். தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். தென்னை நார் தொழிற்சாலைகளுக்காக வங்கியில் பெறப்பட்ட கடனுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். வல்லுநர் குழு அமைத்து தென்னை நார் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com