மேட்டூர் அணை: நந்தி சிலை தெரிகிறது!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரிகிறது.
மேட்டூர் அணை: நந்தி சிலை தெரிகிறது!

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரிகிறது. 

காவிரி டெல்டா பாசனத்தின் ஜீவநாடியாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி தொடங்கி ஜனவரி 28-ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீரைப் பயன்படுத்தி குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும். 

வழக்கமான நடைமுறைப்படி கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 

அன்றைய தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. பாசனத்திற்காக 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 13 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து பெருமளவு குறைந்த நிலையில், வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்ட வந்தது.

இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தாமதாக தொடங்கிய நிலையில், ஜூலை மாத இறுதியில் தான் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் விடுவிக்கப்பட்டது. ஆனால் மழை குறைந்து விட்ட நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 131 கன அடியாக குறைந்து விட்டது. வழக்கமாக ஆடிப்பெருக்கின் போது வெள்ளமாய் ஆர்ப்பரித்து ஓடும் காவிரி நதி கொளத்தூர், பண்ணவாடி ஆகிய இடங்களில் ஓடை போல சுருங்கி விட்டது. 

நீர்மட்டம் 60 அடிக்கும் கீழாக குறைந்து விட்ட நிலையில், அணையில் மூழ்கியிருந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை 2 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சியும், ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி. என மொத்தம் 41 டி.எம்.சி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நீர்வரத்து பெருமளவு குறைந்துவிட்ட நிலையில் தற்போதைய நீர் இருப்பு 24 டி.எம்.சியாக மட்டுமே உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் 16 கண் பாலம் பகுதி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. 

நாள்தோறும் ஒரு டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இருக்கும் நீர் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

மேட்டூர் அணை நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய நீரை கேட்டுப் பெற வேண்டும் என்பதே ஒட்டு மொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com