அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குவோருக்கு மேலும் அதிகரித்த சுமை

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குவோருக்கு ஏற்கனவே இருந்த சுமை மேலும் அதிகரித்துள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குவோருக்கு மேலும் அதிகரித்த சுமை


சென்னை: அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குவோருக்கு ஏற்கனவே இருந்த சுமை மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பிரிபடா பங்கான (யுடிஎஸ்) நிலத்துக்கும், கட்டடத்துக்கும் தனித்தனி பத்திரப்பதிவு நடந்து வந்த நிலையில், அதனை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவுக் கட்டணத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு, பிரிபடா நிலத்துக்கான பதிவுக் கட்டணம் 9 சதவிகிதமாகவும், கட்டடத்துக்கு 4 சதவிகித கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இது தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 9 சதவிகிதம் என மாற்றப்பட்டுள்ளது. இதனால், வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டணம் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

அதாவது, கட்டுமான நிறுவனத்திடமிருந்து ஒருவா் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில், குடியிருப்பின் விற்பனைப் பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை இனி தனியாக பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்; இதே போன்று கட்டுமான ஒப்பந்தக் கட்டணமாக தனியே 4 சதவீத கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இந்தப் புதிய கட்டண விகிதங்களை உடனடியாக அமல்படுத்தும் வகையில் அனைத்துப் பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு பதிவுத் துறை ஐ.ஜி.-க்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலா் பி.ஜோதி நிா்மலாசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதன்படி, உதாரணத்துக்கு ஒருவர் ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை வாங்குகிறார் என்றால், முந்தைய பதிவுக் கட்டணம் என்றால் 40 லட்சம் நிலம், 60 லட்சம் கட்டடம் என்ற மதிப்பைக் காட்டினால் அவர் 6 லட்ச ரூபாயை பதிவுக் கட்டணமாக செலுத்த நேரிடும். ஆனால், தற்போது ஒட்டுமொத்தமாக 9 சதவிகிதம் என்பதால் ஒரு கோடிக்கு அவர் ரூ.9 லட்சத்தை பதிவு கட்டணத்துக்கு செலுத்த நேரிடும் என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.

இது மட்டுமல்லாமல், வீடு வாங்குவோர், வீடு கட்டுவதற்கு முன்பே முன்பதிவு செய்தால், அவர்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டியும் சேர்ந்துவிடும். இதனால், இவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.11 லட்சத்தை செலுத்த வேண்டியது வதும். ஆனால், கட்டுமானம் நிறைவடைந்த பிறகு ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்கப்படுவதால் 2 லட்சத்தை மிச்சம் பிடிக்க முடியும் என்கிறார்கள்.

கடந்த ஒரு சில மாதங்களில், பதிவுக் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மூன்றாவது கட்டண உயர்வு இதுவாகும். ஏற்கனவே, வழிகாட்டு மதிப்பு மற்றும் 20 சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, வீட்டு, மனைத் தொழில் பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதால், இந்த கட்டண உயர்வுகளை திரும்பப் பெற வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஏற்கனவே, கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தால் வீடுகளின் விலை அதிகரித்து, வீடு வாங்கும் திறன் குறைந்துவரும் நிலையில், இது வீடு வாங்குவோருக்கு மேலும் சுமையை அதிகரிக்கவே செய்யும் என்று குறிப்பிடுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com