உதவியும், ஊக்கமும் கிடைத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் தூள் கிளப்புவார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக மாணவர்களுக்கு உதவியும், ஊக்கமும் கிடைத்தால் போதும், தூள் கிளப்பிவிடுவார்கள் என்று கூறினார். 
உதவியும், ஊக்கமும் கிடைத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் தூள் கிளப்புவார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு


சென்னை: நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணிகளை வழங்கி வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மாணவர்களுக்கு உதவியும், ஊக்கமும் கிடைத்தால் போதும், தூள் கிளப்பிவிடுவார்கள் என்று கூறினார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 9) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், அம்மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணையதள வசதிகள், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடி கல்வி”, “நம் பள்ளி நம் பெருமை”, “எண்ணும் எழுத்தும்”, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்”, “அனைவருக்கும் ஐஐடி” போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர்
பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்” என்றும்
அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களான இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி), தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி), தேசிய பேஷன் தொழில்நுட்ப கழகம் (என்ஐஎப்டி), இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (ஐஎம்யு), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (என்எல்யு), தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களில் கல்வி பயின்றிட ஜேஇஇ, கியூட், கட்டடக்கலையில் தேசிய திறன் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ள அரசு பள்ளிகளைச் சார்ந்த சுமார் 225 மாணவ, மாணவியர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் அவர்களின் கல்விச் செலவினத் தொகை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. இதன்மூலம் அம்மாணவ, மாணவியர் உயர்கல்வியை எவ்வித தடையுமின்றி பயில இயலும்.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் 25 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டது. 

இம்மாதிரிப் பள்ளிகள் அனைத்தும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது. இம்மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், முதன்மைக் கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில விருப்பமுள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தக் கல்வியாண்டில், மேலும் 13 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, தற்போது 38 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இம்மாதிரிப் பள்ளிகளில் அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளின் காரணமாக இன்றைக்கு சுமார் 225 அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  தமிழக மாணவர்களுக்கும் உதவியும், ஊக்கமும் கிடைத்தால் போதும் மாணவர்கள் தூள் கிளப்புவார்கள். எட்டாக்கனியாய் இருந்த கல்வி இன்று எல்லோருக்கும் கிட்டி இருக்கிறது. இதற்கு நமது முன்னோர்கள் நடத்திய ஏராளமான போராட்டங்கள் தான் காரணம். நீதிக்கட்சி காலத்தில் இருந்து சமூகநீதியை வலியுறுத்தி வரும் சமூக சீர்திருத்தத் தலைவர்களால் தான் இந்த மாற்றத்தை உருவாக்க முடிந்தது. 

225 அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து பயிலச் செல்கின்றனர். தனியார் பள்ளி மாணவர்களால் மட்டும்தான் இத்தகைய நிறுவனங்களுக்குச் செல்ல முடியும் என்கிற எண்ணத்தை உடைத்து நம் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். அரசுப் பள்ளியின் கல்வித் தரம் உயர்ந்திருக்கிறது என்கிற உண்மை உலகுக்குத் தெரியவந்திருக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு நம் அரசுப் பள்ளி மாணவர்களாகிய நீங்கள் நுழையும் பொழுதுதான் சமூக நீதி முழுமையடைகிறது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் மலர வேண்டுமெனில் அனைத்தும் அனைவரும் கிடைக்கும்படி இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

இந்த விழாவில், தைவான் நாட்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவி ஜெயஸ்ரீ பேசியபோது, தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பெற்று தைவான் நாட்டின் குன் ஷான் பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயந்திர பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளதாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்து கடல் கடந்து வேறொரு நாட்டிற்கு கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும், “நான் முதல்வன்”, “இல்லம் தேடி கல்வி”, “புதுமைப் பெண்”, “வானவில் மன்றம்” போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தன்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் தமிழ்நாடு முதல்வருக்கு, மாணவச் சமுதாயத்தின் சார்பில் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com