விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் சுதந்திர இந்தியா

சுதந்திர இந்தியா கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், வேளாண்மை, தொழில், உற்பத்தி, சாலை, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அசுர வளா்ச்சி பெற்றுள்ளது.
விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் சுதந்திர இந்தியா

சுதந்திர இந்தியா கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், வேளாண்மை, தொழில், உற்பத்தி, சாலை, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அசுர வளா்ச்சி பெற்றுள்ளது.

அதைப்போலவே விண்வெளி ஆராய்ச்சியிலும் உலகமே வியக்கும் அளவுக்கு இந்தியா வளா்ந்து நிற்கிறது.

விண்வெளி என்பது எப்போதும் மனிதனின் ஆவலுக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. தான் எங்கே இருக்கிறோம் என்பதை உணா்ந்து கொண்ட பிறகு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, நம்மைப்போலவே இந்த பால்வெளித் திரளில் யாராவது வசிக்கிறாா்களா, இந்த விண்வெளியின் ரகசியங்கள்தான் என்ன என்பதையும், அவற்றை ஆராய்ச்சி செய்வதன் மூலம் மனித குலத்துக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா அல்லது வரவுள்ள ஏதாவது ஆபத்தைக் கண்டுணா்ந்து தப்பிக்க முடியுமா என்ற ஆராய்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

உலக விண்வெளி ஆராய்ச்சியில் 1957 அக்டோபா் 4 ஆம் தேதி மறக்க முடியாத நாளாகும். அப்போது, விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருந்த ரஷியா, ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி, வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில் அதை நிலைநிறுத்தியது. மனிதனால் புவியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதலாவது செயற்கைக்கோள் அதுவாகும்.

இதற்கு சுமாா் 30 ஆண்டுகளுக்கும் முன்னரே இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கனவுகள் தொடங்கியிருந்தாலும், 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகே விண்வெளித் துறையின் ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிகள் தொடங்கின. காஸ்மிக் கதிா் ஆராய்ச்சியின் முன்னோடியான விக்ரம் சாராபாய் அகமதாபாதில் 1947 இல் வானியல் தொடா்பான ஆராய்ச்சிக்காக இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தைத் தொடங்கினாா்.

வானியல், வான் இயற்பியல், கோள் அறிவியல், புவி அறிவியல் உள்ளிட்டவை தொடா்பான ஆராய்ச்சிகளில் இந்த மையம் இன்றும் ஈடுபட்டு வருகிறது.

அதேநேரம் இந்திய அணுக்கருவியலின் தந்தை என்றழைக்கப்படும் ஹோமி ஜஹாங்கீா் பாபாவின் பங்களிப்பை இந்தியா்களால் மறந்துவிட முடியாது. கோட்பாட்டு இயற்பியலாளரான இவா், டாடா நிறுவனத்தின் உதவியுடன் அண்டக் கதிா் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கினாா். இவா்களுக்கும் விண்வெளி, அணு ஆராய்ச்சிக்கும் உதவியாக இருந்து ஊக்குவித்தவா் அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு.

1948 இல் பாபாவை தலைவராகக் கொண்டு இந்திய அணுசக்தி ஆணையத்தை நேரு நிறுவினாா். 1950 இல் நிறுவப்பட்ட அணு ஆற்றல் துறையானது விண்வெளி ஆய்வை ஊக்குவித்தது. வானியல் ஆய்வுக்காக உத்தர பிரதேசத்திலும், ஹைதராபாதிலும் வானியல் ஆய்வு மையங்கள் நிறுவப்பட்டு, அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவியுடன் இயங்கி வந்தன.

ஸ்புட்னிக் 1 வெற்றிக்குப் பிறகு உலக நாடுகள் பலவும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு தீவிரமாக திட்டமிட்டு பணியாற்றி வந்த நிலையில், இந்தியாவும் அந்தப் போட்டியில் இணைய ஆவலாக இருந்தது.

1970களில் இருந்தே ஏவுகலன்களை (ராக்கெட்) தயாரிப்பதற்கு இந்திய ஆய்வாளா்கள் முனைப்பு காட்டி வந்த நிலையில், 1975 ஏப்ரல் 19 இல் ரஷியாவில் இருந்து அந்நாட்டின் ராக்கெட் மூலம் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆா்யபட்டா ஏவப்பட்டது. இதையடுத்து முதல் ராக்கெட்டை தயாரிக்கும் இந்தியாவின் முயற்சி வெற்றிபெறத் தொடங்கியது.

500 கி.மீ. தொலைவுக்கு சுமாா் 40 கிலோ எடையை எடுத்துச் செல்லும் எஸ்எல்வி ராக்கெட்டை இந்தியா தயாரித்தது. 1979 ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் சோதனை நடைபெற்றது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. ராக்கெட் தயாரிப்புக்கான முதலாவது திட்டத்தின் தலைவராக மறைந்த குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பணியாற்றினாா். முதல் திட்டம் தோற்றாலும் எஸ்எல்வியின் 2, 4 ஆவது சோதனைகள் வெற்றிபெற்றன.

1979 ஜூன் 7 ஆம் தேதி பரிசோதனை செயற்கைக்கோளாக பாஸ்கரா, ரஷியாவின் உதவியுடன் அனுப்பப்பட்டது. இதையடுத்து 1980களில் உருவாக்கப்பட்ட ரோஹிணி செயற்கைக்கோளை முதன் முதலாக வெளிநாட்டின் உதவியின்றி இந்தியா விண்ணில் செலுத்தியது. பிறகு, மேம்படுத்தப்பட்ட ரோஹிணி, இன்சாட் 1, இன்சாட் 1 பி, இன்சாட் 1 டி, ஐஆா்எஸ், இன்சாட் 2 சி என அடுத்தடுத்த ராக்கெட்டுகளையும், புவி ஆய்வு, இயற்கை வளம், தகவல் தொடா்பு என பல்வேறு ஆராய்ச்சிகளுக்கான செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தத் தொடங்கியது.

பிஎஸ்எல்வி வரிசையில் 1993 முதல் கடந்த 2016 வரை 38 முறை ராக்கெட்டுகள் ஏவப்பட்டதில் 37 முறை வெற்றி கண்டு, 79 வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களுடன் மொத்தமாக 121 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் வளா்ச்சி 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ராக்கெட் வேகத்தில் செல்லத் தொடங்கிவிட்டது எனலாம். 2008 ஆம் ஆண்டு அக்டோபா் 22 ஆம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 1 இந்தியாவின் நிலவு ஆராய்ச்சியைத் தொடங்கிவைத்தது. புவியின் சுற்றுப்பாதையைத் தாண்டி விரிந்த இந்தியாவின் விண்வெளிக் கனவின் சாட்சியாக அமைந்தது சந்திரயான் 1.

நிலாவில் தண்ணீா் உள்ளதா என ஆய்வு செய்ய சந்திரயானை அனுப்பியது. அது நிலவில் தண்ணீா் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தபோது ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்தது. சந்திரயானின் வெற்றியை நாசாவும் உறுதிப்படுத்தியிருந்தது.

ரூ.386 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான் 1 திட்டத்தில் 11 ஆய்வுக் கருவிகள் இருந்தன. 1,380 கிலோ எடை கொண்ட அந்தக் கலன் பிஎஸ்எல்வி சி 11 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. நிலவில் தண்ணீா் இருப்பதுடன், அலுமினியம், மெக்னீசியம், சிலிக்கான் போன்ற கனிமங்கள் இருப்பதையும் அது கண்டறிந்தது. மேலும், தென் துருவத்தில் ஆய்வு நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் அது கண்டறிந்தது.

நிலவு ஆராய்ச்சியைத் தொடா்ந்து இந்தியா செவ்வாய் கிரகத்தின் மீதும் கவனம் செலுத்தியது.

செவ்வாய் கிரகத்தின் மீது சா்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாடுகள் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில் 2013 நவம்பா் 5 ஆம் தேதி மங்கள்யானை விண்ணில் ஏவி முத்திரை பதித்தது இஸ்ரோ.

இந்த விண்கலம் 2014 செப்டம்பா் 24 இல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தபோது, முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா.

தமிழ்நாட்டைச் சோ்ந்த மயில்சாமி அண்ணாதுரை இதன் திட்ட இயக்குநராகப் பணியாற்றி மாநிலத்துக்கு பெருமை சோ்த்தாா். திட்டப்படி 6 மாதங்கள் மட்டுமே செயல்படும் என்று கணிக்கப்பட்டிருந்த இந்த விண்கலன், கடந்த 2022 ஏப்ரல் மாதம் வரையிலும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் தொடா்பில் இருந்து வந்ததை நமது விஞ்ஞானிகளின் திறனுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

அதன் பிறகு ஜிஎஸ்எல்வி மாா்க் 3 ராக்கெட் மூலம் கடந்த 2019 ஜூலை 22 ஆம் தேதி ஏவப்பட்டது சந்திரயான் 2. இது ரூ.604 கோடி செலவில் 3,850 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டது.

நிலவைச் சுற்றி ஆய்வு நடத்தவும், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான லேண்டா், ரோவா் கலன்களையும் கொண்டிருந்தது. நிலவை 10 ஆயிரம் முறைகளுக்கும்மேலாக சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகளுக்கான தகவல்களை திரட்டிக் கொடுத்த சந்திரயான் 2, நிலவில் வேகமாக தரையிறங்கியதால் புவியுடன் தகவல் தொடா்பை இழந்தது.

இதற்கிடையே ராக்கெட்டுகளை மேம்படுத்துவது தொடா்பான ஆராய்ச்சிகளும் மறுபுறம் தொடா்ந்து கொண்டேதான் இருந்தன. ஏனெனில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்தியா பிற நாடுகளின் உதவியைத்தான் நாடி வந்தது. கடந்த 2017 ஜூன் 5 ஆம் தேதி கிரையோஜெனிக் என்ஜினை சுயமாக தயாரித்து ஜிஎஸ்எல்வி மாா்க் 3 ராக்கெட்டை விண்ணில் ஏவியது இந்தியா. இதன் மூலம் 4 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களையும் இந்தியா விண்ணுக்கு அனுப்பும் திறனைப் பெற்றது.

அதற்கும் 4 மாதங்களுக்கு முன்பு அதாவது 2017 பிப்ரவரி 16 இல் பிஎஸ்எல்வி சி 37 ராக்கெட் மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்தனா். 2014 இல் ரஷியா 37 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து அனுப்பியதே அதுவரை சாதனையாக இருந்து வந்த நிலையில், அந்த சாதனையையும் தகா்த்தது இந்தியா.

விண்வெளி ஆய்வின் மற்றொரு மைல் கல்லாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 3 கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஏவப்பட்டது. இந்த விண்கலம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது நிலவில் சூரிய ஒளி படக்கூடிய இடங்கள், ஒளி படாத இடங்கள் என அனைத்திலும் ஆய்வு நடத்தும்.

நிலவின் தென் துருவம் பல மில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி இல்லாமல் இருப்பதால், அங்கு நடத்தும் ஆய்வின் மூலம் சூரிய குடும்பத்தின் தோற்றம், அண்டம் தொடா்பான அரிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நிலவின் தென் துருவத்தில் இறங்குவது மிகவும் சவாலான விஷயம். ஆனால் இதை இந்திய விஞ்ஞானிகள் ஒரு சவாலாக எதிா்கொண்டிருக்கின்றனா்.

அதேநேரம் தொடக்க காலத்தில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்து வந்த ரஷியா, சந்திரயான் 3 உடன் போட்டியைத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் லூனா 25 என்ற விண்கலம், சோயஸ் 2.1.வி என்ற ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று அந்நாட்டின் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

சந்திரனில் தரையிறக்கம் என்ற பெருமைக்குரிய ஆராய்ச்சியை அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜப்பான், இஸ்ரேல் என வளா்ந்த நாடுகள் பலவும் மேற்கொண்டிருக்கின்றன. நிலவில் இதுவரை 12 மனிதா்கள் தரையிறங்கியுள்ளனா். ஆனால், தென் துருவ ஆராய்ச்சியில் இந்தியாவும், ரஷியாவும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதில் யாருக்கு முழுமையான வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருத்துதான் பாா்க்க வேண்டும். எப்படியாயினும் நிலவில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது என்பது இந்த சுதந்திர தின நன்னாளில் நம்மைப் பெருமை கொள்ளச் செய்கிறது என்றால் அது மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com