ஆடி அமாவாசை: பாபநாசம் தாமிரவருணியில் ஆயிரக் கணக்கானோர் புனித நீராடி தர்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை பாபநாசம் தாமிரவருணி, அம்பாசமுத்திரம் தாமிரவருணி மற்றும் ஆம்பூர் கடனாநதியில் ஆயிரக்கணக்கானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் கோயில் படித்துறையில் புனித நீராடும் பக்தர்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் கோயில் படித்துறையில் புனித நீராடும் பக்தர்கள்

அம்பாசமுத்திரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை பாபநாசம் தாமிரவருணி, அம்பாசமுத்திரம் தாமிரவருணி மற்றும் ஆம்பூர் கடனாநதியில் ஆயிரக்கணக்கானவர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.

தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. 

இதையடுத்து புதன்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரவருணியில் கோயில் படித்துறை, அய்யா கோயில் படித்துறை, யானைப்பாலம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை 4 மணி முதற்கொண்டே திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். 

ஆடி அமாவாசையை முன்னிட்டு தனியார் வாகனங்கள் அகஸ்தியர் பட்டியில் நிறுத்தப்பட்டன. அரசு பேருந்தில் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அம்பாசமுத்திரம் காசிநாதர் கோவில் படித்துறையிலும், கீழ ஆம்பூர் கடனாநதி ஆற்றுப் பாலத்திலும் புனித நீராடி தர்பணம் செய்து வழிபட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலை காரையாறில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர்.  கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அரசு பேருந்துகளில் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் கோயில் பகுதியில் உள்ள தாமிரவருணியில் புனித நீராடி விரதம் முடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

ஆடி அமாவாசை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், தூசி மாடசாமி, பட்டவராயர், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து பகல் 1 மணிக்கு மதியக் கொடையும், மாலை 4.30 மணிக்கு கோமரத்தார்கள் பூக்குழி இறங்குதலும் நடைபெறும்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு காவல்துறையினர், வனத்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com