அல்வா சாப்பிட்ட அண்ணாமலை!

பாளையங்கோட்டையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பங்கேற்ற அண்ணாமலை, அங்குள்ள இனிப்புக் கடை ஒன்றில் அல்வா வகைகளை ருசி பார்த்தார்.
அல்வா சாப்பிட்ட அண்ணாமலை
அல்வா சாப்பிட்ட அண்ணாமலை


பாளையங்கோட்டையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பங்கேற்ற அண்ணாமலை, அங்குள்ள இனிப்புக் கடை ஒன்றில் அல்வா வகைகளை ருசி பார்த்தார்.

என் மண், என் மக்கள் நடை பயணத்தை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் இருந்து சனிக்கிழமை தொடங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் அருகே முடித்தார். 

நடைப்பயணத்தில் பங்கேற்ற அண்ணாமலை தெற்கு பஜார் வழியாக வந்தபோது அங்குள்ள ஒரு லாலா கடைக்கு, தன்னுடன் நடைப்பயணம் மேற்கொண்டவர்களுடன் சென்று பல்வேறு அல்வா வகைகளை ருசி பார்த்தார்.

பிறகு, நடைப்பயணத்தின் நிறைவில் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது நடைப்பயணத்தில் பங்கேற்ற உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். வீரத்திற்கு பெயர் பெற்ற நெல்லை மண்ணில் வாஞ்சிநாதன் தனது 25 ஆவது வயதில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேய ஆஷ் துரையை சுட்டுக்கொன்று தூக்கு கயிற்றுக்கு முத்தமிட்டவன். 

தாமிரவருணியை சுத்தப்படுத்துவதற்கு தமிழக அரசு தனி பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. அதில் 45 வார்டுகளில் திமுகவினர் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த திமுக உறுப்பினர்களே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த 30 சதவீத கமிஷன் கேட்கும் மேயரை மாற்ற வேண்டும்.  இல்லையெனில் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

மோடி  பிரதமர் ஆனதற்கு பிறகு விவசாயத்தில்  புரட்சி ஏற்படுத்தியுள்ளார். இதனால் விவசாயிகள் இரண்டு மடங்கிற்கு மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். மோடி  பிரதமர் ஆன பிறகு 20 பொருள்களை  குறைந்தபட்ச ஆதார விலை பட்டியலில் சேர்த்துள்ளார். திமுக ஆட்சியில் தென் தமிழகத்தில் ஜாதி கலவரங்கள், மாணவர்கள் மீது ஜாதி ரீதியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சினிமா பாணியில் மாணவர்கள் ஜாதி கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் ஜாதியை முன்னிலைப்படுத்தி வாரம் ஒரு படம் வெளியாகிறது. அதில் உதயநிதி நடிக்கிறார். அதை முதல்வர் பாராட்டுகிறார். திமுகவினர் நீட் தேர்வுக்கு எதிராக நாளை போராட்டம் நடத்துகிறார்கள் 

அதே நேரத்தில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை நாங்கள் வெளியிடுவோம். மொத்தம் 33 தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ளன  அதில் 22 கல்லூரிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை.  2006 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் 13 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த காலக் கட்டத்தில் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுத்து மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளன. அந்த பணத்தை 30 முதல் 50 சீட்டுகளில் எடுத்து விடலாம் என்பதால் அனுமதி பெற்றார்கள். ஆனால் நீட் தேர்வின் காரணமாக அந்தக் கனவில் மண் விழுந்தது. இதன் காரணமாகவே திமுகவினர் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

அதே நேரத்தில் நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போது மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நீட் தேர்வு சாதாரண மக்களுக்கு எதிரானது அல்ல என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com