
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளையும் அவர் தனது டிவிட்டர் என்ற எக்ஸ் பக்கத்தில் இணைத்துள்ளார் சு. வெங்கடேசன்.
சு. வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்ஐடிக்கள் ஜெய்ப்பூரில் உள்ள எம்என்ஐடி ஆகிய நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆசிரியரல்லாத அலுவலர் பணி நியமனங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிக்கை அது.
அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இதில் உடனடியாக தலையிட்டு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள தேர்வு பாட முறையை மாற்றி அமைக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.