எப்படி இருக்கும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்? இந்த வசதியுமா?

விரைவில் திறக்கப்படவிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகே, கட்டப்படவிருக்கும் புதிய ரயில் நிலையம் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்


சென்னை: விரைவில் திறக்கப்படவிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகே, கட்டப்படவிருக்கும் புதிய ரயில் நிலையம் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான வரைவு அறிக்கையை தெற்கு ரயில்வே தயாரித்து சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் அளித்துள்ளது. அதில், பேருந்து நிலையத்திலிருந்து, ரயில் நிலையம் வரை திநகரில் அமைந்திருப்பதைப் போன்ற நடை மேம்பாலம் அமைக்கும் திட்டமும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், மூன்று நடைமேடைகளைக் கொண்ட 12 ரயில் பெட்டிகள் நிற்கும் வசதியுடன் ரயில்நிலையம் அமையவிருக்கிறது. ரயில்நிலையத்திலிருந்து மேம்பாலம் மூலம் மக்கள் எளிதாக எந்த சிரமமும் இன்றி பேருந்து நிலையத்துக்குச் செல்வதற்கு வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு வேளை, மேம்பாலம் நடைமேடையில் தரையிறங்குவதற்கான வடிவமைப்பு இல்லாவிட்டால் அதற்கேற்ப நடைமேடைகளை மாற்றி வடிவமைக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து நடை மேம்பாலம்தான் மிக முக்கிய வசதியாக கருதப்படுகிறது.

தற்போதைக்கு விரைவு ரயில்கள் நின்று செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்படாது என்றும், நான்காவது நடைமேடை ஏற்படுத்தப்பட்டால், அங்கிருந்தும் நடை மேம்பாலத்தை இணைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் பயணிகள் வரை கையாளும் வகையில் ரயில் நிலையம் வடிவமைக்கப்படவிருக்கிறது.

கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ரயில்வே நிா்வாகம் அதற்கு ஒப்புதல் வழங்கியது.

இத்திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.40 லட்சத்தை ரயில்வே துறைக்கு ஏற்கெனவே வழங்கியுள்ள நிலையில், சா்வே மற்றும் பூா்வாங்க பணிகளை ரயில்வே நிா்வாகம் தொடங்கவிருக்கிறது.

இப்பணிகள் நிறைவடைந்ததும், திட்டத்துக்கான ஒப்பந்தம் விடப்படும். ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த ரயில் நிலையத்தை ஒரு வருஷத்துக்குள் கட்டி முடிக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. வண்டலூருக்கும், ஊரப்பாக்கத்துக்கும் இடையே இந்த ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.

இதில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூா் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகள் நடப்பதாகவும், முடிச்சூரில் புதிதாக ஆம்னி பேருந்து நிறுத்தம் அமையவிருப்பதாகவும்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் அமைய விருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை படிப்படியாக இரண்டு, மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com